அரசியல்

தி.மு.க தொடங்கிய மாநில சுயாட்சிக் குரல் இன்று பல்வேறு மாநிலங்களிலும் ஒலிக்கிறது - முரசொலி !

தி.மு.க தொடங்கிய  மாநில சுயாட்சிக் குரல் இன்று பல்வேறு மாநிலங்களிலும் ஒலிக்கிறது - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (21-09-2024)

மலர்க மாநில சுயாட்சி-2

இன்னொன்றையும் சொன்னார் டி.எம்.நாயர்!

‘அனுப்பி வைக்கப்படும் ஆளுநர்களுக்கு எதுவும் தெரியாது’ என்று அன்றே கண்டுபிடித்துச் சொன்னவர் டி.எம்.நாயர்தான். “பதவியில் இருக்கும் ஆளுநர்களுக்கு மற்றவர்களின் நிலையைக் கண்டறியும் வாய்ப்பு இல்லை. அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களின் நிலையை அவர்களால் உணர முடியாது” என்று அன்றே சொன்னார் டி.எம்.நாயர். ‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?’ என்று புரியும் மொழியில் இதனைத்தான் சொன்னார் பேரறிஞர் அண்ணா.

மாண்டேகு --– செம்ஸ்போர்டு குழுவினரைச் சந்தித்து, ‘மாநிலங்களை நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்க வேண்டும். மொழி அடிப்படையில் மாற்றம் செய்ய வேண்டும் - – இது அவசியமானது. தற்போது இந்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். இவற்றில் பலவற்றை மாநில அரசுகளின் பொறுப்பில் விட வேண்டும். இதை நிறுவினால்தான் கூட்டாட்சி முறை ( Federal system) வெற்றி பெற முடியும்” என்று சொன்னார் டி.எம்.நாயர். இதனைத்தான் சுதந்திர இந்தியாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கையில் எடுத்தார்கள்.

1963 சனவரி 25 ஆம் நாள், பிரிவினைத் தடைச் சட்ட மசோதாவுக்கான அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாநிலங்களவையில் அண்ணா பேசினார். “நாம் ஒரு கூட்டாட்சி அமைப்பை ஏற்றிருக்கிறோம், அதனை ஒரு துணைக் கண்டம் என்று அழைக்கிறோம், இதற்கு ஒற்றையாட்சி அமைப்பை ஏற்க முடியாது, இந்த நாடு மாறுபட்ட வரலாறுகளையும் பலதிறப்பட்ட மனோபாவங்களையும் கொண்டது” என்பதை விரிவாக விளக்கி வந்த அண்ணா, “நமது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றைத் தன்மைகளை எதிரித்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாக நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன்” என்று பேசினார்.

t m nair justice party
t m nair justice party

மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி, அதற்கேற்ப இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதை 1967 தேர்தல் அறிக்கை முதல் இன்று வரை தி.மு.கழகம் வலியுறுத்தி வருகிறது.

“மாநில உரிமைகளைப் பாதுகாத்திடும் முறையிலும் குறிப்பிடப்படாத மிச்ச அதிகாரங்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முறையை மாற்றி அவை மாநிலங்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதற்காகவும் கழகம் பாடுபடுவதுடன் அந்த நோக்கத்துடன் இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறது” என்று 1967 தேர்தல் அறிக்கை கூறியது.

இறுதிக்காலத்தில் மரணப் படுக்கையில் இருந்தபோதும், மாநில சுயாட்சிக்காகவே எழுதினார் அண்ணா. அதிகாரமற்ற முதலமைச்சர் பதவியில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்பதையும் அண்ணா சொன்னார்.

“வெற்றுத்தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக்கூறி நடைமுறையில் மத்திய அரசிற்கு மென்மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற நமது அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை” என்று எழுதினார்.

‘அண்ணாவின் உயில்’ என்று போற்றப்படும் கட்டுரை இது. அண்ணாவின் உயிலாக, உயிராக இருந்தது மாநில சுயாட்சிதான்!

மாநில அரசுகள் எந்த எந்த அதிகாரங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதையும், ஒன்றிய அரசிடம் எப்படிப்பட்ட அதிகாரங்களை ஒப்படைக்கலாம் என்பதையும் விவாதத்திற்குப் பயன்படும் வகையில் முதலமைச்சர் கலைஞரின் அரசால் இராஜமன்னார் குழு 1969 செப்டம்பர் 22 அன்று அமைக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசராகவும், நான்காவது நிதிக்குழுவின் தலைவராகவும் இருந்தவர் மாண்புமிகு இராசமன்னார் அவர்கள். இக்குழுவில் சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ.இலட்சுமணசாமி ( ஆர்க்காடு இரட்டையர்களில் ஒருவர்), சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் பி.சந்திரா ஆகியோர் இடம்பெற்று இருந்தார்கள். 27.5.1971 அன்று இராசமன்னார் குழு தனது அறிக்கையை அளித்தது. இந்தியாவிலேயே ஒரு மாநில அரசு, மாநில சுயாட்சிக்காக அமைத்த முதல் குழு இதுதான்.

16.4.1974 அன்று மாநில சுயாட்சித் தீர்மானம் தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞரால் கொண்டு வரப்பட்டது.

தி.மு.க தொடங்கிய  மாநில சுயாட்சிக் குரல் இன்று பல்வேறு மாநிலங்களிலும் ஒலிக்கிறது - முரசொலி !

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தத் தீர்மானம்:

“மாநில சுயாட்சி பற்றியும், இராசமன்னார் குழுவின் பரிந்துரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரைகளையும், இராசமன்னார் குழுவின் அறிக்கையையும் இப்பேரவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு; பல்வேறு மொழி, நாகரிகம், பண்பாடு, ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக் காக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், மக்களுடன் நெருங்கிய தொடர்புகொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும் – மாநில சுயாட்சி பற்றியும் இராசமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துரைகளை மத்திய அரசு ஏற்று மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவு செய்கிறது” –

– என்ற தீர்மானம் 20.4.1974 அன்று சட்டப்பேரவையிலும், 27.4.1974 அன்று மேலவையிலும் நிறைவேறியது.

அதுவரை அரசியல் கட்சிகளால் அரசியல் அரங்குகளில் ஒலித்த மாநில சுயாட்சிக் குரல், ஒரு மாநில அரசாங்கத்தால் சட்டமன்றத்தின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அத்தகைய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உண்டு.

தி.மு.க.வால் மட்டுமே அன்று ஒலிக்கப்பட்ட மாநில சுயாட்சிக் குரல் இன்று பல்வேறு மாநிலங்களில் ஒலிக்கத் தொடங்கி இருப்பதைப் பார்க்கிறோம். இதுவும் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

முன்பைவிட பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அதிகாரம் இப்போது மையப்படுத்தப் பட்டுள்ளது. ஆணவம் அதிகார மையம் ஆகி உள்ளது. எதேச்சதிகாரம் கோலோச்சுகிறது. ஒற்றைத் தன்மையே ஒரே தன்மையாக ஆகி வருகிறது. அதே நேரத்தில், பா.ஜ.க. அரசு முழு வலிமை வாய்ந்த அரசும் அல்ல. பலவீனமான அரசு. இந்தநிலையில் மாநில சுயாட்சியின் குரல் இந்தியக் குரலாக மாற வேண்டும்.

மலரட்டும் மாநில சுயாட்சி!

தோன்றட்டும் இந்தியக் கூட்டாட்சி!

banner

Related Stories

Related Stories