முரசொலி தலையங்கம் (20-09-2024)
மலர்க மாநில சுயாட்சி-1
“மாநில சுயாட்சியை வென்றெடுக்க சட்ட முன்னெடுப்புகளை கழகம் மேற்கொள்ளும்” என்று திராவிட முன்னேற்றக் கழகப் பவள விழா -–- முப்பெரும் விழாப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரக்க முழக்கமிட்டுள்ளார்.
“நமது எல்லாக் கனவுகளும் நிறைவேறிவிட்டதா எனக் கேட்டால்... இல்லை! மாநில உரிமைகளை வழங்கும் ஓர் ஒன்றிய அரசு அமையவில்லை. நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலை தான் இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவும் –- தலைவர் கலைஞரும் வலியுறுத்திய மாநில சுயாட்சிக் கொள்கை என்பது நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்று. எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக, உறுதியாகச் செய்யும்” என்பது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வழங்கிய செய்தி மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான செய்தி ஆகும்.
“மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழக்கம். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற திருச்சி மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை தலைவர் கலைஞர் வகுத்துக் கொடுத்தார். அதில் ஐந்தாவது முழக்கம்தான் இது.
பன்முகத்தன்மை கொண்ட இந்த பரந்துவிரிந்த இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாடு காலம் கடந்தும் நிலைபெற வேண்டுமானால் அதற்கு ஒரே மருந்து மாநில சுயாட்சிதான் என்பதை பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் காலம் தோறும் வலியுறுத்திக் கொண்டே வந்தார்கள்.
இந்தியா ஒரு நாடல்ல, அது பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டமாகும். மொழிவழி தேசிய இனம் கொண்ட பல்வேறு பகுதிகளை, ஒன்றாக இணைத்து ஒரே இடத்தில் அதிகாரத்தைக் குவிக்கும் வகையில் ஆக்கி பிரிட்டிஷ் அரசு ஆண்டது. அதுதான் தங்களுக்கு வசதியானது என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் – - அதிகாரம் பொருந்திய மத்திய அரசு ஆகும்.
இன்றைக்கு நாம் வைத்திருக்கும் டெல்லி அதிகார மையமானது 1833 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிச் சட்டத்துக்குப் பிறந்த குழந்தைதான். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அரசின் சட்டத்தை அப்போது நீட்டித்தது பிரிட்டிஷ் நாடாளுமன்றம். அன்றைக்கு வங்காள மாகாண ஆளுநராக இருந்தவரை, இந்தியாவுக்கே கவர்னர் ஜெனரலாக ஆக்கினார்கள். அன்றைய பம்பாய், மெட்ராஸ் மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களும் பறிக்கப்பட்டு கவர்னர் ஜெனரலுக்கே போனது. 1857 சிப்பாய் கலகம் எனப்படும் சுதந்திரப் போர் நடைபெற்ற காரணத்தால் அதனை அடக்குவதற்காகவும் அனைத்து அதிகாரங்களையும் கவர்னர் ஜெனரலுக்கே கொடுத்தார்கள்.
இந்தியா முழுமைக்கும் வரி விதிக்கும் அதிகாரத்தை கவர்னர் ஜெனரலே எடுத்துக் கொண்டார். நிதி அதிகாரத்தை மொத்தமாக மாகாணங்களில் இருந்து பறித்தார்கள். இதனை முதலில் எதிர்த்தவர், அன்று மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த சார்லஸ் ட்ரெவிலியன். ‘மையப்படுத்தப்படும் வரி விதிப்பு முறையானது மெட்ராஸ் மாகாணத்தின் வளர்ச்சிக்கு உதவாது’ என்று ‘மாநில சுயாட்சிக் குரலை’ ஓங்கி ஒலிப்பவராக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆளுநர் இருந்தார். ஆனால் இன்று சுதந்திர இந்தியாவில் அடக்குமுறை ஆளுநர்களே இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலம் என்று ஏன் சொல்கிறோம் என்றால்.. 1860 ஆம் ஆண்டே மெட்ராஸ் மாகாணத் தொழில் கூட்டமைப்பினர் இந்த வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். (பா.ஜ.க. ஆதரவாளராகவே இருந்தாலும் ஜி.எஸ்.டி.யை எதிர்த்து அன்னபூர்ணா அதிபர் கேள்வி கேட்டது இதன் தொடர்ச்சிதானே!)
இப்படி மெட்ராஸ் மாகாணத் தொழில் கூட்டமைப்பினர் கேள்வி கேட்க, அன்றைய ஆளுநர் சார்லஸ் ட்ரெவிலியன் தான் தூண்டுகிறார் என்று சொல்லி அவரையே ஆளுநர் பதவியில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சி தூக்கியது. இப்படி அராஜகமாக அறிமுகம் செய்யப்பட்டதுதான், மையப்படுத்தப்பட்ட நிதி அதிகாரம் ஆகும். அதுதான் சுதந்திர இந்தியாவிலும் தொடர்கிறது. மாநிலங்களின் வளத்தை மொத்தமாகச் சுரண்டி இந்திய ஒன்றிய அரசு வைத்துக் கொள்கிறது. இந்த இடத்தில்தான் ‘மாநில சுயாட்சிக் கொள்கை’ உதயமாகிறது.
‘க்ரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் என்று கேட்கக் கூட உரிமை இல்லாத நிலை இன்று உருவாகி இருக்கிறது’ என்று முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்ட கேள்வி, கிண்டலான கேள்வி அல்ல, வேதனையான கேள்வியாகும். இதில்தான் ஒன்றிய அரசின் அனைத்து எதேச்சதிகாரத் தன்மைகளும் அடங்கி இருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அதிகாரக் குவியல் கொண்ட அரசுக்கு எதிராக முதல் குரல் கொடுத்தது நீதிக்கட்சி. சமூகநீதி மட்டும்தான் நீதிக்கட்சி பேசியது என்று பலரும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். இல்லை, கூட்டாட்சி முறையையும் அந்தக் காலத்திலேயே வலியுறுத்தியது நீதிக்கட்சி.
1918 அக்டோபர் 2 அன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசும்போதும், ‘‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஏற்று அதற்கேற்ப அரசியல் சீர்திருத்தம் செய்வது ஒன்றுதான் தற்போது சென்னை அரசியலில் நிலவி வரும் நோய்களை ஒழிக்க வழி’ என்றார் டி.எம்.நாயர். “1909இல் இஸ்லாமியர்க்கு வழங்கப்பட்டது போன்ற வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பார்ப்பனரல்லாதாருக்கு வேண்டும்” என்றார் அவர். இதனுடன் இணைத்து கூட்டாட்சி முறையையும் வலியுறுத்தினார். Our immediate out look, Political reconstruction in india –- ஆகிய தலைப்புகளில் 1917 ஆம் ஆண்டே பேசி இருக்கிறார் டி.எம்.நாயர்.
‘அனுப்பி வைக்கப்படும் ஆளுநர்களுக்கு எதுவும் தெரியாது’ என்றும் 100 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிய தொலைநோக்காளர்தான் டி.எம்.நாயர்.
-– தொடரும்