சென்னை தலைமைச் செயலகத்தில் 2024-25 சட்டப் படிப்பிற்கான முதுநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆணையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஆன்லைன் ரம்மி குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நீதி அரசர்களுக்கு தெளிவான விளக்கத்தை அரசு சார்பாக தந்துள்ளோம். ஆன்லைன் ரம்மி விளம்பரத்திற்கு ஒன்றிய அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும். இருந்த போதும் தமிழகத்தில் இதை முறைப்படுத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.
நீட் விலக்கு குறித்து ஒன்றிய அரசு இரண்டு கேள்விகளை கேட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மட்டும் ஏன் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்கிறீர்கள் என காரணம் கேட்டனர். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் போதிய விளக்கத்தை தந்து இருக்கிறோம் .
இந்தியாவில் பல மாநிலங்களில் நீட் இருந்தாலும் தமிழகத்தின் நீட் இல்லாத காலத்திலேயே இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவர் தந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. சாதாரண மாணவர்கள் கூட சிறந்த மாணவர்களாக உருவாக முடியும் என அதற்கான உதாரணங்களை தந்துள்ளோம் .
நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கபடுகின்றனர் என விளக்கம் தந்துள்ளோம். ஒன்றிய அரசு நீட்டிற்காக ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத்திற்கு தமிழக அரசின் சட்டம் முரண்பாடாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
அதற்கு ஒன்றிய அரசின் நீட் சட்டம் முரண்பாடாக உள்ளதால் தான் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது என தெளிவாக விளக்கியுள்ளோம். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என தெளிவாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தின் போது பிரதமரை சந்தித்து நீட் தேர்வு விலக்கு குறித்து வலியுறுத்துவார்” எனக் கூறினார்.