மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்த நிலையில், அவர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது. அந்த வழக்கில் ஜாமின் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவந்து ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், ” டெல்லியில் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. ஆனால் மக்களின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ளாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன். எனவே இன்னும் இரண்டு நாட்களில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன்” என்று அறிவித்தார்.
மேலும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுடன் டெல்லி சட்டமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தார். இதனிடையே, டிசம்பரில் நடைபெறும் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல்களோடு டெல்லிக்கு தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளன.
தற்போது நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6ஆம் தேதி மட்டுமே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வரை அவகாசம் உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.