தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, இது தொடர்பான கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்தது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த சூழலில் இன்று இந்த நினைவு நாணயம் வெளியீட்டு விழா, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
இதனை முன்னிட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முத்தமிழறிஞர் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி எழுதி உள்ள கடிதத்தில், “இந்தியாவின் தலைசிறந்த மைந்தர்களில் ஒருவரான கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான இத்தருணத்தில், கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தில் ஒரு உயர்ந்த ஆளுமையாக விளங்கியவர் கலைஞர். தமிழ்நாட்டின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் அவர் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர். சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை கொண்டிருந்த ஒரு அரசியல் தலைவராக விளங்கியவர் கலைஞர்.
பன்முகத் திறன்களை கொண்ட ஆளுமையாகத் விளங்கிய கலைஞர், தமிழ் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் மக்களால் இன்றும் நினைவுகூறப்படுகிறது. அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகளால் பிரகாசித்து, அவருக்கு 'கலைஞர்' என்ற அன்பான பட்டத்தைப் பெற்றுத் தந்தது. இந்த நினைவு நாணயம், கலைஞரின் நினைவையும், அவரது கொள்கை மற்றும் இலட்சியங்களைப் போற்றுவதாக அமைந்துள்ளது.
இந்த நாணயம் கலைஞரின் பணிகள் ஏற்படுத்திய நிலையான தாக்கத்தை நினைவூட்டுவதாக அமையும். கலைஞருக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னேறும் போது, கலைஞரின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனைகளும் தேசத்தின் எதிர்காலத்தை வழிநடத்தும். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியாக அமையட்டும்.” என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
“முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துகளுக்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்”