தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, இது தொடர்பான கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்தது.
அதன் அடிப்படையில் ஒன்றிய நிதி அமைச்சகம் இதனை பரிசீலித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 13-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ.100 நினைவு நாணயம் வெளியிடும்படி தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு அதனை அரசிதழில் வெளியிட்டது. கலைஞரின் நினைவு நாணையத்தின் ஒரு புறம் சிரித்த முகத்துடன், 'முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 - 2024' என ஆங்கிலத்திலும் இந்தியிலும் அச்சிடபட்டுள்ளது.
மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா என ஆங்கிலத்திலும், பாரத் என இந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று (ஆக 18) மாலை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த நாணயத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.
இந்த சூழலில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், எம்.பி-யுமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில், தமிழ்நாட்டு மக்களுக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது வியத்தகு வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
கலைஞர் அவர்களின் சமூகரீதியான முற்போக்குப் பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழி வகுத்தது. அவரது உறுதியான தலைமையின் கீழ், தமிழ்நாடு ஒரு திடமான இலட்சியப் பாதையில் சென்றுள்ளது. அவரது கருத்தியல் தெளிவும் மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை முன்னோடி மாநிலமாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. பல மாநிலங்கள் பெரிய கனவுகள் காண ஊக்கமளித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாணய வெளியீட்டு விழாவின் முக்கியத்துவம் குறித்த அன்பான வாழ்த்துகளுக்கு, ராகுல் காந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுகளை நனவாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று குறிப்பிட்டு ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்.