மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்த சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு மாற்றி அதன் மூலம் ஆட்சியை பாஜக கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.
எனினும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மஹாராஷ்டிராவில் அதிக இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னங்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையிலும் இந்தியா கூட்டணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதிலும் மக்களவைத் தேர்தலில், சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலேவை எதிர்த்து பாராமதி தொகுதியில் போட்டியிட்ட அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தோல்வியடைந்தது அஜித் பவாருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த நிலையில், என் சகோதரிக்கு எதிராக நான் எனது மனைவியை களமிறக்கிறது நான் செய்த தவறு என அஜித் பவார் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "எனது சகோதரிகள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். அதே போல என் சகோதரி சுப்ரியா சுலேவை எதிர்த்து எனது மனைவி சுனேத்ராவை நான் களமிறங்கியது நான் செய்த தவறு. இதனை நான் செய்திருக்கவேகூடாது. இது பற்றி எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த முடிவை எடுத்தது என்றாலும், நான் அவ்வாறு செய்தது தவறு என்பதை தற்போது உணர்கிறேன்"என்று கூறியுள்ளார்.