மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
மறுபக்கம் இந்துத்துவ அமைப்புகளை வலுப்படுத்தி அதன் மூலம் நாட்டை மத ரீதியாக பிளவுபடுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்துத்துவ கருத்துக்கள் கல்வித்துறையில் ஒன்றிய, மாநில அரசுகளால் தொடர்ந்து புகுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில், RSS அமைப்பின் தலைவர்கள் எழுதிய புத்தகங்களை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என மத்தியப் பிரதேச பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில உயர்கல்வித்துறையின் மூத்த அதிகாரி டாக்டர் திரேந்திர சுக்லா, அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், "RSS கல்விப் பிரிவான வித்யாபாரதியுடன் தொடர்புடைய முக்கிய RSS தலைவர்களின் படைப்புகள் பாடத்தில் இடம்பெறவேண்டும்.
இவர் பல்வேறு இளங்கலைப் படிப்புகளில், அறிமுகப்படுத்துவதற்கு வசதியாக, ஒவ்வொரு கல்லூரியிலும் 'பாரதிய ஞானப் பரம்பரா பிரகோஷ்தா' (இந்திய அறிவுப் பாரம்பர்யக் களம்) அமைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு, RSS தலைவர்களின் 88 புத்தகங்களின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும், கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.