நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவித்து கே.ஆர்.என். ராஜேஷ் குமார் எம்.பி பேசும் போது,
“நீட் தேர்வை பொருத்தவரை ஆரம்பகாலம் முதலே தி.மு.க தனது எதிர்ப்பை முன்வைத்து வருகிறது. நீட் தேர்வின் பாதிப்பால் தமிழ்நாட்டில் மாணவி அனிதா தொடங்கி சதீஷ்குமார் வரை, மாணவ, மாணவிகள் 22 பேர் தங்கள் இன்னுயிரை நீர்த்துள்ளனர்.
இதனால், நீட் தேர்வு விளக்கு என்பதுதான் எங்கள் இலக்கு என்று கூறி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்தஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் மக்கள் இயக்கமான, கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்.
இவ்வியக்கம் தொடங்கப்பட்ட முதல் 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து பெற வேண்டும் என குறிக்கோளாக வைத்திருந்தனர். ஆனால் தமிழ்நாட்டில் இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு கோடியே 10 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்தை இட்டுள்ளனர்.
இந்த நீட் தேர்வால் யார் பயன் பெறுகிறார்கள் என்றால் பயிற்சி மையங்கள் வைத்து நடத்தக்கூடியவர்கள் தான் பயன் பெற்று வருகிறார்கள்.
ஒவ்வொரு மாணவரும் நீட் தேர்வு பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்றால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டணமாக செலுத்தக்கூடிய நிலை உள்ளது.
ஆகையால் தான் கிராமப்புற மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில் தான் நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ச்சியாக போராடி வருகிறோம்.
அதன் ஒரு கட்டமாக தான் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒட்டுமொத்தமான சட்டமன்றத்தினுடைய தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசாங்கத்திற்கு அனுப்பி உள்ளார்கள். அதற்கு ஒன்றிய அரசாங்கம் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு அளிக்க வேண்டும் இந்த அவையின் வாயிலாக ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.