சமூக நீதி, மாநில உரிமை, கல்வி உரிமைகளுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து சென்னையில் தி.மு.க மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்பி எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் பூச்சி முருகன், எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, திராவிடர் கழக துணை பொது செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ”நீட் தேர்வை ஒழிக்கும் வரை தி.மு.க மாணவர் அணி ஓயாது. தேவைப்பட்டால் தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டத்தை நாங்கள் எடுத்து செல்வோம்" என தி.மு.க மாணவர் அணி செயலாளர் எழிலரசன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், ”ஓயமாட்டோம் ஓயமாட்டோம் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம்..பறிக்காதே, பறிக்காதே, ஒன்றிய அரசே எங்கள் கல்வி உரிமையை பறிக்காதே.. ரத்து செய், ரத்து, செய் நீட் என்னும் அநீதியை ரத்து செய்.. "என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில் ”நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.