ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் பொய்களுக்கு பஞ்சமில்லாத சூழல் உருவாகியுள்ளது என்பது தவிர்க்க முடியாத உண்மையாக மாறியுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களில் மோடி ஒருவகையான பொய்களையும், வெறுப்புகளையும் கட்டவிழ்த்துவிட்டார் என்றால்,
பா.ஜ.க நிர்வாகிகள் அதற்கு ஒரு படி மேல் சென்று, வெறுப்புகளையும், பொய்களையும் பரப்பி வந்தனர்.
எனினும், அது கட்சி சார்ந்தவர்களால் பரப்பப்படும் போது, பெருவகையான கவனம் ஈர்க்க வாய்ப்பில்லை என உணர்ந்த பா.ஜ.க,
பல்வேறு ஊடகவியலாளர்களை ஏவிவிட்டு, பொய்களுக்கு புது கட்டிடமே கட்டி எழுப்பியது.
அவ்வாறு கட்டப்பட்ட கட்டிடத்தில், அமர்ந்துகொண்டு பொய்களை பரப்பி வந்தவர்கள் தான், சின்ஹா, பிக்கு மாட்ரே, அஜீத் பாரதி ஆகிய ஊடகவியலாளர்களும், BefittingFacts, TheSquind ஆகிய ஊடகங்களும் என்ற பட்டியலை சின்ஹாவே வெளியிட, அதனை மக்களுக்கு உரக்க வெளிப்படுத்தியுள்ளார் முகமது சுபைர்.
இவர்கள், பா.ஜ.க செய்யாத நன்மைகளை, செய்ததாக கூறியவர்கள் மட்டுமல்ல. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிப்படுத்தாத வெறுப்பை, வெறுப்பாக மக்களிடம் கொண்டு சென்றவர்கள்.
இத்தகையோரை கண்டிக்க தான் பா.ஜ.க முன்வரவில்லை என்பதைத் தாண்டி, கண்டிக்கும் அரசுகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
அதற்கு சான்றாகவே, அண்மையில் கர்நாடகா மாநிலத்தில் அஜீத் பாரதி என்ற வலதுசாரி ஊடகவியலாளர், “ராமர் கோவிலை இடித்து, பாபர் மசூதியை மீண்டும் கட்டி எழுப்பும் எண்ணத்தில் இருக்கிறது காங்கிரஸ்” என்ற கற்பனையான, வெறுப்பை உண்டாக்குகிற கூற்றினை பரப்பியதற்கு எதிராக,
கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க முன்வந்த போது, அதனை தடுக்க முந்திக்கொண்டு வந்துள்ளது கர்நாடக பா.ஜ.க.வும், உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசின் காவல்துறையும்.
இதனால், அடைக்களம் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள், வலிமை இருக்கிறது என்ற மிதப்பலை அடைந்துள்ளனர் ஒரு சார்பு ஊடகவியலாளர்கள்.
எனினும், அதனை எதிர்த்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் இடத்தில், எதிர்க்கட்சி தலைவர்களும், இந்தியா கூட்டணி ஆட்சி வகிக்கும் மாநில அரசுகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.