நடப்பாண்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் சிக்கியுள்ளனர். நீட் தேர்வை தொடர்ந்து மற்றொரு அரசுத் தேர்வான NET தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர்களின் பணியிடத்துக்கு தகுதி பெறுவதற்கான தேசிய தேர்வு முகமை நடத்திய NET தேர்வு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதியுள்ளனர். இந்த சூழலில் இந்த தேர்வு தொடர்பான வினாத்தாள் டெலிகிராம், டார்க் நெட் உள்ளிட்ட இணையதளங்களில் கசிந்துள்ளது. ஏற்கனவே நீட் பிரச்னை சூடு பிடித்து வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
NET வினாத்தாள் கசிவு விவகாரம் வெளியானதையடுத்து, மறுநாளே அந்த தேர்வை ரத்து செய்தது ஒன்றிய அரசு. தொடர்ந்து வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்ததையடுத்து, இது தொடர்பாக தற்போது அடையாளம் தெரியாத நபர்கள் மீது CBCID போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் NET தேர்வு வினாத்தாள் ரூ.500 முதல் ரூ.5000 வரை விற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீட் முறைகேடு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் முறைகேடு குறித்து நாள்தோறும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையிலும், இந்த வழக்கை சிபிசிஐடி வசம் பாஜக ஒப்படைக்கவில்லை.
நீட் முறைகேடு விவகாரத்திலேயே தேசிய தேர்வு முகமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், UGC-NET தேர்வு முறைகேட்டில் தேசிய தேர்வு முகமை மீது புகார்கள் எழுந்துள்ளது. நீட் முறைகேடு அம்பலமான நிலையிலும், அதனை ரத்து செய்ய முடியாது என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் முறைகேட்டில் பல லட்சம் கைமாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பீகாரை சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு தொடர்பான விவகாரத்தில் தினந்தோறும் திடுக் தகவல்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.