நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது. .
கூட்டணி கட்சிகளின் உறுதுணையோடு மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராகியுள்ளார். எனினும் நடந்து முடிந்த தேர்தல் பாஜகவுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசத்தில் பெருமளவு பின்தங்கியுள்ளது பாஜக. நாடு முழுவதும் மக்கள் தங்கள் ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளித்து வரும் நிலையிலும், பாஜக தில்லுமுல்லு வேலைகளை செய்து இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
எனினும் மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். இந்த தேர்தலில் பாஜகவின் பின்னடைவு, பாஜக தலைமை மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் பாஜகவை மேலும் ஆட்டம் காண வைக்கும் விதமாக ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு அந்தந்த மாநில கட்சிகள் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். இதில் மூன்று மாதங்களில் தேர்தல் வரவுள்ள மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 30 இடங்களை வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் மீண்டும் இந்தியா கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவ சேனாவின் (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, NDA ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "இன்னும் 3 மாதங்களில் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலிலும் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிடவுள்ளது. மஹா விகாஸ் அகாடி கூட்டணியான காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் ஒன்றாக போட்டியிடுகிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டது போல, எதிர்வரும் மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலிலும் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளோம்.
மோடி தலைமையிலான NDA ஆட்சி எத்தனை நாட்கள் நீடிக்கப்போகிறது என்று தெரியவில்லை. தற்போது ஒன்றியத்தில் நடைபெறுவது மோடி என்ற தனி நபரின் ஆட்சி அல்ல. மகாராஷ்டிராவில் இன்னும் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்." என்றார்.