மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய பா.ஜ.க அரசு அறிவித்தது முதல் மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மேலும் நீட் தேர்வால் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களும் நடந்து வருகிறது.
அதேபோல் நீட் தேர்வு தொடங்கியது முதலே ஆள்மாறாட்டம், வினாத்தாள் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது. அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் கூட குளறுபடிகள் நடந்துள்ளது.
குறிப்பாக 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியதும் நீட் குளறுபடிகளை உறுதிபடுத்தியுள்ளது.
இதையடுத்து மாணவர்கள் பலர் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்தனர். பின்னர் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கும் மறுதேர்வு ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பா.ஜ.க அரசு தடியடி நடத்தியுள்ளது.
அதேபோல் பீகார் மாநிலத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழநாட்டிலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.