நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம்ம் மிசோரம் ஆகிய சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதே போல ஆந்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஜெகன் மோகனின் YSR காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக அக்கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று ஆந்திர மாநிலம் கன்னாவரம் பகுதியில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் அப்துல் நாசர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நடிகர்கள் ரஜினிகாந்த் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம் சரண் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆந்திர மாநில அமைச்சராக பதவி ஏற்று கொண்டார்.