நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது
இதனால் கூட்டணி கட்சிகளின் தயவோடு பாஜக ஆட்சியில் அமரவுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றது. இங்கு போட்டியிட்ட பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களோடு நெல்லை பாஜக தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் உடையார் ஆகியோர் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
அந்த ஆடியோவில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வியடைந்தது குறித்து பேசப்பட்டிருந்தது. அதில் பாஜக வளர தமிழகத்தில் கலவரம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் உடையார் பேசியிருந்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறிய நிலையில் பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைப்பாண்டியன் சமூக வலைதளங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட உடையார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மதரீதியான பிரச்சனையை தூண்டியது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது அவதூறு பரப்பியது உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் உடையார் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்