நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. அந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு ஆதரவாகவே வெளியாகியுள்ளது.
அதன்படி பாஜக கூட்டணி 350 முதல் 371 இடங்களுக்கும் மேல் வெற்றி பெரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பாஜகவே பெரும்பான்மை பெரும் என்றும், பாஜக ஆளாத முக்கிய மாநிலங்களில் கூட பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கருத்து கணிப்பின் முடிவுகளில் உள்ள ஏராளமான தவறான தகவல்கள் குறித்த செய்தி வெளியாகி வருகிறது. அதன்படி Zee News கருத்து கணிப்பு முடிவுகளில் 10 தொகுதிகளே உள்ள ஹரியானாவில் பாஜக கூட்டணி 16- 19 இடங்கள் வரை வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல 4 தொகுதிகளே உள்ள இமாச்சல பிரதேசத்தில் பாஜக கூட்டணி 6-8 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு ஏன் பாஜக 350 இடங்களை வெல்லும் என்று கூறியுள்ளீர்கள். 500க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று சொல்லியிருக்கலாமே என்று நெட்டிசன்கள் கருத்து கணிப்பு முடிவுகளை விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், ஜீ நியூஸ் முதலில் வெளியிட்ட கணிப்பில் கூறப்பட்டிருந்ததை விட 50 இடங்களில் பாஜக குறைவாக வெல்லும் என்று தனது முடிவை மாற்றி வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிட்டுள்ள ஜீ நியூஸ் பாஜககூட்டணி 353-367 இடங்களை வெல்லும் என்று கூறி இருந்தனர்.மேலும் இந்தியா கூட்டணி 118- 133 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் மற்றவர்கள் 43- 68 இடங்களில் வெல்வர் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், தொடர் விமர்சனங்களால் தங்கள் கருத்து கணிப்பு முடிவை ஜீ நியூஸ் மாற்றி வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜக கூட்டணி 305- 315 இடங்களில் வெல்லும் என்றும், இந்தியா கூட்டணி 180- 195 இடங்களை வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்றவர்கள் 38- 52 இடங்களை வெல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.