இந்தியாவில் தற்போது பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மூன்றாம் முறையாக ஆட்சியமைக்கும் என பாஜகவினர் கூறி வரும் நிலையில், களநிலை பாஜகவுக்கு எதிராக இருப்பதாக பல்வேறு அரசியல் விமர்சகர்களும் கூறிவருகின்றனர்.
கடந்த இரண்டு தேர்தலில் பாஜக ஒன்றியத்தில் ஆட்சியமைக்க உத்தரபிரதேச மாநிலம் முக்கிய காரணமாக இருந்தது. =கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 72 இடங்களிலும், 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 62 இடங்களிலும் பாஜக வெற்றிபெற்றது.
இப்போது உத்தரபிரதேசத்தில் மட்டும் 70 இடங்களில் வெற்றிபெறும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால், உத்தரபிரதேசம் முழுவதும் சென்று களஆய்வில் ஈடுபட்ட சமூக செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உத்தரபிரதேசத்தில் பாஜகவால் 50 இடங்களை கூட தாண்ட முடியாது என்று கூறியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பதிவில், உத்தரபிரதேசத்தில் அரசியல் பூகம்பம் ஏற்படலாம். அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பாஜகவின் வாக்குகள் நழுவுவது தெளிவாகத் தெரிகிறது.உத்தரப்பிரதேசத்தில் 70 இடங்கள் என்பதை மறந்து விடுங்கள், பாஜகவால் 50-ஐ கூட தாண்ட முடியாது. பெரும்பாலான பாஜக எம்.பிக்கள் மற்றும் உள்ளூர் பா.ஜ.க-வினர் மீது மக்களுக்கு கோபம் அதிகமாக உள்ளது.
பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவை வாக்காளர்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பாஜக வாக்காளர்களில் நான்கில் ஒரு பகுதியினர் இந்த முறை பா.ஜ.க-விற்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். உ.பி-யில் பாஜகவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இது கருத்துக் கணிப்பு அல்லது மேஜிக் கணிப்பும் அல்ல. அதை நீங்களே சரிபார்க்கலாம்.