இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் இந்த தேர்தலில் 400 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று கூறி வந்த பாஜகவினர், தற்போது அவ்வாறு கூறுவதில்லை. ஏனெனில் பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறாது என களநிலவரங்கள் காட்டுவதாக பாஜகவினருக்கு தெரியவந்ததே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதே போல முதற்கட்ட வாக்குப்பதிவும் பாஜகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பாஜகவின் தோல்வியை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் உணர்த்துகிறது என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது, இந்தியா கூட்டணிக்கு அனைத்து மக்களின் ஆதரவும் கிடைத்ததை ஒவ்வொரு வாக்குசாவடியிலும் காணமுடிகிறது. மறுபுறம் பாஜக ஆதரவு வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
பாஜக அடையப்போகும் வரலாற்று தோல்வி குறித்த செய்தி, பாஜகவினர் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவர்களும் இந்த சமூகத்தின் நிம்மதியாக வாழவேண்டும் என்பதால், தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைதியாக இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியின் ஆட்சியில் பாஜகவினருக்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்பதை அறிந்திருக்கிறார்கள். பாஜகவின் மிகப்பெரிய தோல்வியை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிக தெளிவாக உணர்த்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.