ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் மோடி முஸ்லிம்கள் நாட்டின் வளங்கள் மீது முதல் உரிமை உள்ளவர்கள் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார் என்றும், மக்களின் செல்வங்கள் முஸ்லிம்களுக்கு மறுவிநியோகம் செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள் என்றும் பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இந்த நிலையில்,ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேச்சில் சிறிதளவும் உண்மையில்லை என தி இந்து நாளேடு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
A fact-check on Modi's controversial speech in Rajasthan என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த கட்டுரையில், பொருளாதார சமத்துவமின்மை குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளதையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2006-ம் ஆண்டு பேசியதையும் வெட்டி ஒட்டி பிரதமர் மோடி பேசி உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி, இந்தியப் பெண்களின் சராசரி கருவுறுதல் விகிதம் 2.1ஆக நீடிப்பதாகவும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மத குழுக்களின் கருவுறுதல் விகிதம் பல ஆண்டுகளாக குறைந்து வருவதாகவும், மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2006-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியது அரசு ஆவணங்களில் உள்ளதாகவும், அதன்படி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் எஸ்சி-எஸ்டிகள், பிற பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம் உள்ளிட்ட சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நாட்டின் வளர்ச்சியிலும், அதிகாரத்திலும் சமபங்கு பெற தகுதியானவர்கள், இதனை உறுதி செய்யும் வகையில் புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும் என மன்மோகன் சிங் பேசி இருந்தார் என்பதை தி இந்து சுட்டிக்காட்டியுள்ளது.
விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் குறித்து மன்மோகன் சிங் பேசியதை திரித்து முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி இருப்பதையும் தி இந்து நாளேடு ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள், மற்ற மதக் குழுக்களை விட பின்தங்கி இருப்பது ஒன்றிய அரசின் தரவுகளின்படி தெளிவாகிறது என்றும் 2005-ம் ஆண்டு கணக்கின்படி, 12 வருட பள்ளிப் படிப்பை முடித்த முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்ற மதக் குழுக்களை விட மிகக் குறைவாக இருந்தது என்றும் 2021-ம் ஆண்டிலும் இந்நிலை நீடித்ததாகவும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்துக்களை விட முஸ்லீகளின் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதும் தி இந்து நாளேட்டின் கட்டுரையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.