இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் இந்த தேர்தலில் 400 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று கூறி வந்த பாஜகவினர், தற்போது அவ்வாறு கூறுவதில்லை. ஏனெனில் பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறாது என களநிலவரங்கள் காட்டுவதாக பாஜகவினருக்கு தெரியவந்ததே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதனால் வழக்கம்போல தேர்தலில் தில்லுமுல்லு செயலில் பாஜகவினர் களமிறங்கியுள்ளனர். முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், திரிபுராவில் உள்ள சில தொகுதிகளில் 100%-க்கு மேல் வாக்குகள் பதிவானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திரிபுராவில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மட்டும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 545 வாக்குகள் மட்டும் இருக்கும் மாஜ்லிஸ்பூர் வாக்குசாவடியில் 574 வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதே போல 1290 வாக்குகள் இருக்கும் கயர்பூர் வாக்குசாவடியில் 1292 வாக்குகளும், 451 வாக்குகள் இருக்கும் மோகன்பூர் வாக்குசாவடியில் 492 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது குறித்து ஆதாரத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் , முறைகேடு உறுதியாகி உள்ளதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.