இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், பாஜக அறிவித்த சில வேட்பாளர்கள் போட்டியிட மறுத்து விலகினர். இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதுவரை பாஜக அறிவித்துள்ள 417 வேட்பாளர்களில் 116 வேட்பாளர்கள் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாஜகவின் வேட்பாளர்களில் 4-ல் ஒருவர் பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்ததும் புலனாய்வு அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ, எம்.பி.களை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. அதன் பின்னர் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி அந்த பகுதியில் தங்கள் செல்வாக்கை அதிகரித்து வருகிறது.
அதிலும் நாடு முழுவதும் செல்வாக்கை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் 37 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற 6 பேருக்கு சீட் வழங்ப்பட்டுள்ளது. இதன் மூலம் பிறரின் செல்வாக்கிலே பாஜக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.