மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது. இதனிடையே தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தன்னை நம்பி வந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு பாஜக துரோகம் இழைத்துள்ளதாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகினறனர்.
மஹாராஷ்டிராவில் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு சிவசேனாவுக்கு 8 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகளும் மட்டுமே கொடுக்க பாஜக முன்வந்தது. பின்னர் சிவசேனா(ஷிண்டே) பிரிவில் மட்டும் 14 எம்.பிக்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கான இடங்களையாவது கொடுக்க ஷிண்டே பாஜகவை வலியுறுத்தியதைத் தொடர்ந்து அந்த கட்சிக்கு 13 தொகுதிகளை ஒதுக்கியது.
தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியான ஹின்கோலி தொகுதிக்கு முதலமைச்சர் ஷிண்டே வேட்பாளரை அறிவித்த நிலையில், வேட்பாளரை மாற்றும்படி பாஜக அழுத்தம் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி வேட்பாளர் மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி சார்பில் யார் போட்டியிடவேண்டும் என்பதைக் கூட பாஜகவே முடிவு செய்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக ஷிண்டே பிரிவுக்கு ஆதரவு அழைத்துவந்த அக்கட்சியின் தொண்டர்கள் கூட தற்போது உத்தவ் தாக்கரே பக்கம் சென்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே பாஜகவோடு சேரும் கட்சிகள் அதன் செல்வாக்கை இழந்துவந்தது தொடர்கதையாக நிலையில், அதில் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் இணைந்துள்ளனர்.