ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்கு காலஅவகாசம் கேட்ட SBI உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் வெளியானது. அதில் பாஜகவுக்கே அதிக நன்கொடை சென்றதும் உறுதியானது. இந்த நிலையில், ரூ.966 கோடி நன்கொடை கொடுத்த நிறுவனத்துக்கு ரூ.14,400 கோடி மதிப்புடைய ஒப்பந்தத்தை பாஜக அரசு ஒதுக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேகா இன்ஜினீயரிங் என்ற நிறுவனம் ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி அதனை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளது. அதன் பின்னர் மும்பை அருகே தானேயில் இருந்து போரிவலி வரை சுரங்கச்சாலை அமைக்கும் பணியை மஹாராஷ்டிரா பாஜக அரசும் ஒன்றிய பாஜக அரசும் இணைந்து வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.14,400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.எல்.ஏ ஜிதேந்திர அவாட் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில், "தானே-போரிவலி இடையேயான சுரங்கச்சாலை அமைக்க ரூ.14,400 கோடிக்கு மேகா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, அந்த நிறுவனம் ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு எல் அண்ட் டி நிறுவனமும் விண்ணப்பித்து இருந்தது. ஆனால் மேகா இன்ஜினீயரிங் நிறுவனம் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானது என்று பாஜக அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அதுவும் மதிப்பீட்டு தொகையை விட அதிக தொகைக்கு மேகா நிறுவனத்திற்கு இந்த வேலை கொடுக்கப்பட்டது. இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் வாங்குவதன் மூலம் பணி பெறும் நிறுவனங்கள் விசாரணை மற்றும் தரத்தை பேணுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.