நாடாளுமன்ற மக்களவையின் பதவி காலம் நிறைவடையவுள்ள நிலையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நாடாளுமன்ற தேர்தல் குறித்த விவரங்களை அறிவித்தார்.
அதன்படி இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. அதே போல 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது.
வாக்குஎண்ணிக்கை வரும் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றுமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி மாநில அரசுகளால் எந்த புதிய அறிவிப்பையும் வெளியிட முடியாது. மேலும் மக்கள் நல திட்டங்களையும் செயல்படுத்த முடியாது.
இதன் காரணமாக கிட்டத்தட்ட 80 நாட்கள் அரச நிர்வாகம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலை 7 கட்டமாக நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதே நேரம் பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தமுடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாடு காரணமாக பாஜக அரசு முன்வைத்த ஒரே நாடு - ஒரே தேர்தல் ,திட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாஜகவின் ஒரே நாடு - ஒரே தேர்தல் கொள்கைப்படி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும்.
தற்போது நாடாளுமன்றம் மற்றும் சில மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலையே ஒரே கட்டமாக நடத்தமுடியாமல் 7 கட்டங்களாக பாஜக அரசு நடத்துகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இப்படி இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்குமான தேர்தலை தேர்தல் ஆணையம் எவ்வாறு நடத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு வேளை அப்படியே தேர்தல் ஆணையம் நடத்தும் என்றாலும் அதற்கு சுமார் ஒரு வருடம் வரை காலமாகும் சூழல் நிலவுகிறது. அப்படி ஒரு நிலைமை வரும் என்றால், அத்தனை காலம் அரசுகள் செயலிழந்த நிலையில் இருக்கும். இது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பின்னடைவாக அமையும்.
இது போன்ற காரணங்களால் ஒரே நாடு - ஒரே தேர்தல் என்ற பாஜகவின் கொள்கை நடைமுறை சாத்தியமற்றது என்பது உறுதியாகியுள்ளது. ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டம் தேர்தல் செலவுகளை குறைக்கும் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால், குடியரசுத் தலைவரிடம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தது.
அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக்கப்பட்டால், அந்த மாநிலத்தில் மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போது தேர்வாகும் அரசு 5 ஆண்டுகள் பதவியில் இல்லாது அடுத்த ஒரே நாடு - ஒரே தேர்தல் காலம் வரை மட்டுமே பதவியில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், ஒரு மாநிலத்தில் முழு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, அந்த அரசு 4 ஆண்டுகள் ஆட்சிக்கு பின்னர் கவிழ்ந்தால் மீண்டும் அதே அளவு செலவு அந்த மாநிலத்தில் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்படும். பின்னர் அடுத்த ஆண்டே அதே அளவு செலவு செய்து, மீண்டும் நடத்தவேண்டியிருக்கும்.இது போன்ற நிலை பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றால் செலவு அதிகரிக்குமே தவிர அது குறைவாகது என்பது உறுதியாகியுள்ளது.