இந்திய வரலாற்றின் அடையாளங்களில் ஒன்று பழைய நாடாளுமன்ற கட்டடம். இங்குதான் இந்தியாவின் பெருமையாகப் போற்றப்படும் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தரமாக இருக்கும் நாடாளுமன்றத்திற்குப் பதிலாக புதிய நாடாளுமன்றத்தைக் கட்டியது.
அதுவும் மக்கள் கொரோனா காலத்தில் அவதிப்பட்டபோது, ரூ.1200 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கான பணிகள் வேகமாகச் செயல்படுத்தப்பட்டது. எதிர்கட்சிகள் கண்டித்தும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்தது ஒன்றிய அரசு.
இதையடுத்து புதிய நாடாளுமன்றக் கட்டடம் கடந்த மே மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய அரசின் தலைவராக இருக்கும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. குடியரசுத் தலைவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.
இதன் நிலையில், தற்போது ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த கோவில் 22-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் பிரதமர் மோடி உட்பட பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை குறிப்பிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.