1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னரும் பாபர் மசூதி விவகாரம் இந்திய அளவில் பரபரப்பான விவகாரமாக திகழ்ந்தது. மேலும், பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையில் இருந்து வந்தது.
அதனைத் தொடர்ந்து அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அந்த தீர்ப்பில், ராமர் கோயில் கட்ட முழு உரிமை ஒன்றிய அரசுக்கு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதில் பிரதமர் மோடி உட்பட பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ராமரின் சிலரை கருவறையில் பிரதமர் மோடி தனது கரங்களில் நிறுவுவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிலையை தொட்டு பிரதிஷ்டை செய்வதை பார்த்து நான் கைதட்ட வேண்டுமா? என பூரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்தா சரஸ்வதி கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்வது சாஸ்திரப்படி நடக்க வேண்டும். ஆனால், அங்கு அப்படி நடக்கவில்லை. இதனால் நான் அந்த நிகழ்ச்சிக்கு செல்லமாட்டேன். “ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிலையை தொட்டு பிரதிஷ்டை செய்வதை பார்த்து நான் கைதட்ட வேண்டுமா?
“ராமர் கோவில் விஷயத்தில் அரசியல் நடக்கக் கூடாது. இன்று வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத் தலங்களாக மாற்றப்படுகின்றன. இதன் மூலம் கோவிலில் ஆடம்பர விஷயங்கள் சேர்க்கப்படுகின்றன, இது சரியல்ல" என்று கூறியுள்ளார் பூரி சங்கராச்சாரியாரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.