ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீதான அச்சுறுதல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து மக்கள் விரோத நடவடிக்கை அதிகரித்துள்ளது
அதனை எதிர்ப்பவர்கள் மற்றும் அதற்கு எதிராக வலுவான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வலதுசாரி அமைப்புகள் மற்றும் இந்துத்வா அமைப்புகள் அச்சுறுத்தியும் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். அப்படி கடந்த காலங்களில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், முற்போக்குவாதி நரேந்திர தபோல்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோவிந்த் பன்சாரே உள்ளிட்டோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூரத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பினர். மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ். பா.ஜ.க அரசின் ஒவ்வொரு திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக இந்தி மொழி திணிப்பு, ராகுல் காந்தி இடைநீக்கம், புதிய நாடாளுமன்ற கட்டம் என பா.ஜ.கவின் அனைத்து நடவடிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்தி வருகிறார்.
அதோடு பிரதமர் நரேந்திர மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டும் விமர்சித்து வருகிறார். இதனால் கடுப்பான ஒன்றிய பா.ஜ.க அரசு பிரணவ் ஜூவல்லர்ஸ் பண மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜைச் சிக்க வைக்கப் பார்க்கிறது. நகைக்கடை விளம்பரத்தில் நடித்த ஒரே காரத்திற்காக அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், freedom என்ற மொபைல் போன் விளம்பரத்தில் நடித்து மக்களை ஏமாற்றிய பிரதமர் மோடிக்கு எப்போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ்2 கட்சியின் சமூகவலைதளபக்கத்தில், "பிரணவ் ஜூவல்லரி விளம்பரத்தில் நடித்ததற்கு பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு ED சம்மன் என்றால்..இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் என்ற விளம்பரத்தில் நடித்து கோடிக்கணக்கானவர்களின் நம்பிக்கையை ஏமாற்றிய மோடி அவர்களுக்கு எப்போது ED சம்மன் அனுப்பும்? " என்று கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு மோஹித் குமார் என்பவர் ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவன ஆரம்பித்து, பொதுமக்களுக்கு 251 ரூபாய்க்கு ஃப்ரீடம் 251 என்ற மொபைல் போனை வழங்குவதாக அறிவித்தார். இந்த நிகழ்வினை பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தொடங்கிவைத்ததோடு, இது குறித்து விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமும் வெளியானது.
இந்த போனை வாங்க முன்பதிவு செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் 251 ரூபாயை அனுப்பிவைத்தனர். ஆனால், இது வரை பொதுமக்களுக்கு அந்த போன் வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிட்டே காங்கிரஸ் கட்சி பாஜகவை விமர்சித்துள்ளது.