தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாததால் ஏதாவது ஒரு கட்டுக்கதைகளைக் கூறி தி.மு.க அரசுக்கு எதிராக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தினம் தினம் ஒரு பொய்யாகக் கருத்தைக் கூறி வருகிறார்.
அண்மையில் கூட ஆவின் பாலை பரிசோதனை செய்ததாகவும், அதுவும் 'பெட்' பாட்டிலில் கொழுப்பு குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் ஆவின் நிறுவனம் 'பெட்' பாட்டில் ஒன்றை விற்பனை செய்யவில்லை என்பது கூட அண்ணாமலைக்குத் தெரியவில்லை. ஆவின் நிறுவனம் விற்பனை செய்யாத ஒரு பாலை அண்ணாமலை எப்படி பரிசோதனை செய்தார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.
இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களும் பதிலடி கொடுத்து விட்டார். மேலும் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத நிறுவனமாக ஆவின் உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அண்ணாமலை போன்றவர்கள் வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டை பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பேசி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அமைச்சரை மிரட்டியுள்ளார். இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், "ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையைத் தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டுகைக் கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.
மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையைச் சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியாளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்" என தெரிவித்துள்ளார்.