2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து யாராலும் மறக்க முடியாது. தீவிரவாதி ஒருவன் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 44 சி.ஆர்.பி.எஃப் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிரவைத்தது.
இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து அப்போதே ஒன்றிய அரசுக்குப் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் ஒன்றிய அரசு அனைத்து கேள்விகளையும் மவுனமாகவே கடந்து விட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உடனான நேர்காணலில், இந்த தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "புல்வாமா தாக்குதல் நடந்த நாளில், உயிரியியல் பூங்காவில் படப்பிடிப்பில் பிரதமர் இருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள நான் பல முறை முயன்றேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்று மாலை 5 அல்லது 6 மணியளவில் பிரதமர் என்னை அழைத்தார். என்ன நடந்தது என என்னிடம் கேட்டார்.
அப்போது அவரிடம், நமது தவறால் ஏராளமானோர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தேன்.அதற்கு என்னிடம் அமைதியாக இருக்கும்படி பிரதமர் கூறினார். இதுகுறித்து யாரிடமும் எதையும் தெரிவிக்க வேண்டாமென்றும் பிரதமர் கூறினார்சில மணி நேரம் கழித்து, என் சட்டக் கல்லூரி நண்பரான அஜித் தோவல் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) என்னை அழைத்தார். புல்வாமா தாக்குதல் குறித்து யாரிடமும் எதையும் பேச வேண்டாமென அஜித் தோவலும் என்னிடம் கேட்டுக் கொண்டார்.
புல்வாமா தாக்குதலை பாஜக வேண்டுமென்றே செய்தது என சொல்ல மாட்டேன். ஆனால், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. புல்வாமா தாக்குதலை அவர்களின் அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டார்கள். நீங்கள் வாக்களிக்கும் போது புல்வாமாவில் வீரமரணம் அடைந்தவர்களைப் பற்றி நினைத்துக்கொள்ளுங்கள் என மீண்டும் மீண்டும் சொன்னார்கள். புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்தவர்களை வைத்து டிராமா நடத்தினர்" என்று கூறியுள்ளார்.