கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு நேற்று கருக்கா என்ற வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓட முயன்றார். அவர் வீசிய குண்டு ஆளுநர் மாளிகை உள்ளே செல்லாமல் வாயில் அருகே சாலையில் வெடித்தது. உடனடியாக சுதாரித்த போலிஸார் குண்டு வீசிய நபரை கைது செய்தனர்.
ஆனால், இது குறித்து X வலைதளத்தில், "ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்" என தவறான தகவல் பதிவிடப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வதெல்லாம் தவறான ஒன்று. வெளியே நடந்த சம்பவம் சாலையில் போற போக்கில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளார். இதற்கு என்ன செய்ய முடியும்?
ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பை தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியில் முழு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லை என்று சொல்வது முழுக்க முழுக்க தவறான ஒன்று. ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு கொடுக்காமல் வேறு என்ன செய்வோம். பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு தானே சரி இல்லை என்று ஆளுநர் முதலில் புகார் கொடுப்பார். இந்த அரசு சட்ட ஒழுங்கை பேணி காப்பதிலே எந்தவிதமான தவறும் செய்யாது. தமிழ்நாடு முதலமைச்சர் எதிரியாக இருந்தாலும் பாதுகாக்க கூடிய தலைவராகதான் இருப்பார்.
ஆர்.எஸ்.எஸ்-ன் பின்னணியில் இயங்கக்கூடிய பாஜக இதுபோன்ற சம்பவங்களுக்கு நிதி உதவியை திமுக அரசுதான் செய்கின்றது என்றெல்லாம் சொல்லக்கூடாது. இது போன்ற சம்பவங்களுக்கு யார் நிதி உதவி அளிப்பார்கள் என்று இந்திய மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் இதுவரை இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டது கிடையாது. ஈடுபட போவதும் கிடையாது. நாங்கள் இது போன்றவர்களை ஆதரிப்பதும் கிடையாது
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தார், தற்போது என்ன சட்ட முழங்கு கெட்டுவிட்டது உளவுத்துறை எங்கே தோல்வி அடைந்து விட்டது. சாலையில் செல்லும் ஒருவர் பெட்ரோல் குண்டை திடீரென்று வீசிவிட்டு சென்றால் அது உளவுத்துறையின் தோல்வியா? பாதுகாக்கப்பட்ட பகுதியிலும் மக்கள் நடமாட்டம் இருக்கதான் செய்கிறது. நடந்து செல்லும் அனைவரையும் சோதனை செய்ய முடியுமா ?
இதுபோன்ற செயலில் ஈடுபட்ட வரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலை கூட அது தாண்டவில்லை.ஆளுநரை திமுக அரசு ஒருபோதும் அவமதிக்கவில்லை அசிங்கப்படுத்தவில்லை. ஆளுநர் பேசக்கூடிய பேச்சுகளுக்கு பதில் அளிக்கக்கூடியது எங்களது கடமை. அவர் கூறுவதற்கு மக்களுக்கு நாங்கள் விளக்கம் சொல்ல வேண்டும். அவர் ஒரு குற்றச்சாட்டு கூறினால் அதற்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டியது அரசின் கடமையா இல்லையா? அந்தக் கடமையைத்தான் அரசு செய்ததை தவிர நாங்கள் பொது குற்றச்சாட்டை எதுவுமே ஆளுநர் மீது சுமத்தவில்லை?
ஆளுநர் எங்கள் மீது சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கும் தவறான புகார்களுக்கும் நாங்கள் விளக்கம் தர வேண்டியது எங்களது கடமை மக்கள் மன்றத்தில் அதுதான் நிற்கும். அப்போதுதான் மக்களுக்கு உண்மை புரியும். ஆளுநர் மாளிகை புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உடனடியாக நேற்றைய தினமே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்த கட்ட விசாரணையும் நடைபெற்று வருகிறது.
திமுக அரசு எடுத்த மென்மையான நடவடிக்கை போல வேறு யாரும் எடுத்திருக்க முடியாது, ஆளுநர் செய்யும் விஷயங்களுக்கு பொறுத்து பொறுத்து தான் பார்த்தோம். அதற்குப் பிறகு அவர் என்ன கூறுகிறாரோ அதற்கு பதில் தான் நாங்கள் கூறுகின்றோமே தவிர தவறான நடவடிக்கைக்கு நாங்கள் செல்லவில்லை இனிமேல் போகவும் மாட்டோம்.
தமிழ்நாட்டில் பாஜகவால் காலே வைக்க முடியவில்லை. அவர்கள் தலைகீழாக நின்றாலும் ஒன்றும் செய்ய முடியாது. எதையாச்சும் வைத்து அரசியல் செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள் அதே போல் தான் இதை வைத்தும் அரசியல் செய்தாலும் தமிழ்நாடு மக்களிடத்தில் இது எடுபடாது. தமிழ்நாடு மக்களுக்கு தெரியும் ஒரு அரசாங்கம் ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசுவார்களா என்று, நாங்கள் அப்படியான தவறுக்கு உடனடியாக இருக்க மாட்டோம். இந்த சம்பவத்தில் எங்கள் பின்னணி எதுவும் கிடையாது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இதில் உள்ள உண்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு வருவோம்" என்று கூறியுள்ளார்.