சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, ஒவ்வொரு தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது... 500 ரூபாய் செல்லாது ஆயிரம் ரூபாய் செல்லாது என்று கூறியது போன்று இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமல்ல" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் இந்தியா என்கின்ற ஒரு கூட்டணியை அமைத்திருக்கிறோம். எனவே தற்போது நாம் இந்தியா என்று பேசினால் எங்கு அந்த கூட்டணிக்கு ஆதரவாக சென்றுவிடும் என்று தற்போது பாரத் என்று பேசுகிறார்கள். ஜி-20 மாநாட்டுக்கு வந்திருந்த தலைவர்களும் இந்தியா என்று பேசினார்களே ஒழிய, யாரும் பாரத் என்று பேசவில்லை.
மோடி கூட மோடியே இந்தியா கூட்டணிக்கு தான் ஓட்டு கேட்கிறார். (இந்தியாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று மோடி பேசிய காணொளியை காட்டினார் கே.எஸ்.அழகிரி). இது மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக பலமுறை கூச்சலிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் அண்ணாமலையிடம் கேட்டுக்கொள்கிறேன். மோடியை பின்பற்றுவதாக இருந்தால் மோடியை பின்பற்றி இதே கோஷத்தினை போட வேண்டும்.
அவரவர் குலத்தொழிலைத் தான் அவர்கள் செய்ய வேண்டும். கடவுளின் பெயரால் பெண்கள் வந்து மார்பு சேலை அணியக் கூடாது என்பது சில வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகுதியில் இருந்தது, அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதனை எதிர்த்து எந்த சாமியாராவது எந்த மதத் தலைவராவது எந்த ஆதீனம் ஆவது கருத்து சொல்லி இருக்கிறார்களா? நாங்கள் மட்டுமே கருத்தினை கூறினோம். நாங்களே சண்டை போட்டு ஜெயிலுக்கு சென்றோம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது... 500 ரூபாய் செல்லாது ஆயிரம் ரூபாய் செல்லாது என்று கூறியது போன்று இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமல்ல. இதற்கு தமிழ்நாடு கேரளா மற்ற மாநிலங்கள் அஞ்ச மாட்டார்கள். எப்பொழுதுமே மக்கள் சக்திதான் வென்றெடுக்கும் ஒழிய சர்வாதிகார சக்தி வெற்றி பெறாது. இப்போது பெற்றிருக்கிற வாக்கு வங்கியை விட அதிகமான வாக்குகள் பெறுவோம்." என்றார்.
தொடர்ந்து நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கொசுவர்த்தி சுருள் படத்தை பதிவிட்டதை குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, " கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, அதுவும் விஷ கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காக வைத்திருப்பார்" என்றார்.
நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொசுவர்த்தி சுருள் ஒன்றை பதிவிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளையும் பெற்று வருகிறது.