சென்னை துறைமுகம் தொகுதி திமுக சார்பில் 130 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 10ஆயிரம் ருபாய் உதவி தொகை மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள், புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக சுற்றுச்சூழல் அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்சிதர்களை வேதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு செயல்படவில்லை அனைவரும் தரிசனம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளிலேயே இறங்குகிறது.
அண்ணாமலையின் பாத யாத்திரை கடந்த 9 ஆண்டு ஒன்றிய ஆட்சி காலத்தில் பெற்ற பாவத்திற்காக , அதற்கு பிராயசித்தம் பெரும் வகையில் அவரது யாத்திரை இருக்கிறது. திமுக ஒரு மிக பெரிய பெரும் இயக்கம், இந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு அளப்பரிய பல திட்டங்களில் செய்துள்ளோம், முதல்வர் மக்கள் மனதில் நீக்கமற சக்தியாகவும் இருந்து வருகிறார், அதனால் தான் இப்படி ஒரு புலம்பலோடு பாத யாத்திரை அண்ணாமலை போன்றோர், மேற்கொண்டு வருகிறார்கள். எத்தனை பாதயாத்திரை 40 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறும்." என்றார்.
பின்னர் திமுக vs பாஜக என்று களம்? தமிழகத்தில் மாறியுள்ளதா.? என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு, "திமுக ஒரு எஃகு கோட்டை. ஒன்று இரண்டு வாக்கு சதவீதம் வைத்திருக்கும் கட்சியுடன் திமுகவை ஒப்பிட வேண்டாம். திமுக ஒரு மாபெரும் பேரியக்கம். தங்கத்துடன் தகரத்தை ஒப்பிட வேண்டாம்." என்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடி இராமநாதபுரம், தொகுதியில் போட்டியிடுவார் என்று வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் "வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் யார் எந்த புறம் வேட்பாளர் என்பது முக்கியம் அல்ல, எப்படிப்பட்ட ஜாம்பவான்கள் வந்தாலும் சரி, தோல்வியை பரிசாக தரக்கூடிய இயக்கம் திமுக." என்றார்.