மணிப்பூரில் மெய்தெய் - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தெய் சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த வீடியோ உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள், மகளிர் அமைப்புகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வருகின்றனர்.
இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதில் எதிர்கட்சிகளை கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மணிப்பூர் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். ஆனால், இதை பற்றி விவாதிக்க பாஜக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில், இன்று மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது நாள் கூட்டம் தொடங்கியது. அப்போது இரு அவைகளிலும் மணிப்பூர் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகள் முழக்கமிட்டதால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவை மீண்டும் கூடியதும், பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே "பல பிரதிநிதிகள் விதி 267-ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தும் அதனை பாஜக அரசு மறுத்து வருகிறது. இப்போது மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. . நாங்கள் அதுகுறித்து தொடர்ந்து குரல் எழுப்பி பிரதமர் அதுகுறித்து பேச வேண்டும் என கூறிவருகிறோம். ஆனால், பிரதமர் அதுகுறித்து பேசாமல், கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார்" என காட்டமாக விமர்சித்துள்ளார்.