மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் சில வாரங்களுக்கு முன்னர் சிவசேனா பாணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்தது. அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் 8 பேருக்கு உடனடியாக ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சம்பவத்துக்கு பின்னர் பாஜக ஷிண்டே தரப்பு சிவசேனாவை ஒதுக்குவதாகவும், விரைவில் ஷிண்டேவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி அஜித் பவாருக்கு முதலமைச்சர் பதவியை வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றவுடன், தான் முதல்வராக விரும்புவதாக தெரிவித்து இருந்தார். மேலும், இரண்டு நாட்களுக்கு முன்னர் அஜித் பவாரின் பிறந்தநாளையொட்டி அவரின் ஆதரவாளர்கள் அவரை முதல்வர் என குறிப்பிட்டு போஸ்டர்களை ஒட்டியிருந்தது ஷிண்டே தரப்பு சிவசேனா தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் மஹாராஷ்டிரா அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.