மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத பா.ஜ.க தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்று, துணை முதல்வர் பதவி பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு மஹாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரி உடந்தையாக இருந்ததாகவும், ஏக்நாத் ஷிண்டே என்ற தனி நபரை பெருமபான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது தவறு என்றும் உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதீமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆளுநர் குறித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட் , “ நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும். அரசை கவிழ்ப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் ஆளுநர் ஈடுபடக்கூடாது.மக்கள் தான் ஆளும் கட்சியை தூக்கி எறிவார்கள். ஆனால் கவர்னரால் இங்கு ஆளும் அரசு கவிழ்க்கப்படுவது ஜனநாயகத்திற்கு சோகமான காட்சியாக இருக்கும்” என்று தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த அறிவுரையின் மூலம் ஆளுநரின் எதேச்சதிராக செயலுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ள நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட்டை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளம் வழியாக விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜனாதிபதி திரவுபதி முர்மூவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி விவேக் தங்கா எழுதியுள்ள இந்த கடிதத்தில், இந்தியாவின் தலைமை நீதிபதியை இதுபோன்று சமூக ஊடகங்களில் கேலி, கிண்டல் செய்வது நீதியின் நடவடிக்கையில் தலையிடுவது ஆகும். இந்த குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் சிவசேனா, ஆம் ஆத்மி,சமாஜ்வாதி போன்ற எதிர்க்கட்சியின் எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கடிதத்தின் நகல் ஓன்றிய சட்ட அமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், டெல்லி போலீஸ் கமிஷனர், இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.