திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்தியானந்தாவிற்குத் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு அயல்நாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. இந்த ஆசிரமத்தில் சிறியவர்கள், இளம் பெண்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் நித்தியானந்தாவின் சத்சங்கத்தைக் கேட்டும் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டும் சீடர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
கர்நாடகாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிடதியில் ஆசிரமம் அமைத்த நித்தியானந்தாவிற்கு கர்நாடகாவில் ஏராளமான சீடர்கள் உள்ளனர். இவர் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்தல், பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் கைது நடவடிக்கைக்கு பயந்து நித்தியானந்தா வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றார். பின்னர் ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாசா நாடு என பெயரிட்டு கொடியையும் வெளியிட்டு அதை தனிநாடாக அறிவித்து அங்கே தனது சீடர்களுடன் இருந்து வருகிறார். அவ்வப்போது கைலாசாவில் இருந்து கொண்டு வீடியோவையும் நித்தியானந்தா வெளியிட்டு வருகிறார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்துடன் கைலாசா நாடு 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அந்நகர பிரதிநிதிகளுடன், கைலாசா பிரதிநிதிகள் கையெழுத்திடும் காட்சியும் அடங்கிய வீடியோ ஒன்று கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கைலாசாவை தனி நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக நித்தியானந்தாவின் சீடர்கள் தொடர்ந்து பேசி வந்தனர்.
அதனைத் தொடர்ந்து கைலாசாவுடன் நெவார்க் நகரம் மட்டுமல்லாமல் ரிச்மண்ட், வர்ஜீனியா, டேடன், ஓஹியோ, புளோரிடா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் ஒப்பந்தம் செய்திருப்பதாக பி.டி.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அது குறித்த உண்மை நிலை வெளிவந்துள்ளது.
அதன்படி மேற்கூறிய அமெரிக்கா நகரங்களின் பிரநிதிகளை நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசா தனி நாடு என்பதை நம்பவைத்துள்ளனர். இதன் காரணமாகவே இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இது குறித்த கரோலினாவை சேர்ந்த ஜாக்சன்வில் என்பவர் கூறும்போது " நாங்கள் கையெழுத்திட்டுள்ளதாலேயே கைலாசாவுக்கு ஒப்புதல் அளித்ததாக அர்த்தம் கிடையாது.அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதில் அளித்துள்ளோம். அவர்கள் கோரிக்கை வைத்த போது, நாங்கள் அவர்களின் பின்னணியைச் சரிபார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.