பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரை வைத்து மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பாஜகவால் நியமிக்கப்படும் ஆளுநர்களும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
அதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுமைகள் பல மாதங்கள் தாமதம் செய்யும் நடைமுறையையும் தொடர்ந்து வருகிறார்கள். தெலுங்கானா மாநில ஆளுநராக செயல்படும் தமிழிசை சௌந்தரராஜன் அங்கு மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, "தெலங்கானா மாநில அரசு ஆளுநரான என்னை மதிக்கவில்லை. ஆளுநர் மாளிகைக்கு கூட வரமறுக்கிறார்கள்” என தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (12.09.2022) முரசொலி நாளிதழில் வெளியான 'சிலந்தி' கட்டுரையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை தாக்கி கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், "மாநிலத்துக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதாகப் பேசும் ஆளுநர்கள்;
தாங்கள் ஒன்றிய அரசின் ஆளும் கட்சியின் ஏஜண்ட் என்ற மமதையைத் துறந்து, மாநில நலனில் அக்கறை கொண்டு, மாநில அரசோடு இணைந்து செயல்பட்டால் இன்று ஆளுநர் தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஆளுநருக்கும் ஏற்பட்டிருக்காது என்பதை, அரசியல் சட்டம் தங்களது அதிகாரத்துக்குத் தந்துள்ள வரம்பை மீறிச் செயல்பட நினைத்திடும் தமிழக ஆளுநர் உள்ளிட்ட அனைத்து ஆளுநர்கட்கும் நினைவுபடுத்த விரும்புகிறோம்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், "நான் அப்பராணியும் இல்லை, அப்பாவியும் இல்லை. புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள். நான் வாய்விட்டு அழுவதும் தலைகுனிவதும் என்னுடைய சரித்திரத்திலேயே இல்லை" என்றார்.
இந்த நிலையில் தமிழிசை செளந்தரராஜன் பதிலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், " 'புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் நான்' என்ற தமிழிசை, சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை கூட மறுக்கப்பட்டிருந்த வரலாற்றை ஏன் சொல்ல மறுக்கிறார்?.. 2022 தோள்சீலை போராட்டம் ஆரம்பித்து 200-வது ஆண்டு " என்று கேள்வியெழுப்பியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.