ஒரு பக்கம் பழனிச்சாமி மறுபக்கம் பன்னீர் மற்றொரு பக்கம் சசிகலா இன்னொரு பக்கம் தினகரன் - என அ.தி.மு.க.வை ஆளுக்கு ஆள்கூறு போட்டு பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
இதிலே எது ஒரிஜினல்' என்பது குறித்து யார் தீர்ப்பு வழங்குவது என்பதிலும் அவர்களுக்குள்ளே அடிதடி! ஒரிஜினலைப் பொதுக்குழு தீர்மானிப்பதா? நீதிமன்றம் தீர்மானிப்பதா? தேர்தல் கமிஷன் தீர்மானிப்பதா? தொண்டர்கள் தீர்மானிப்பதா? என்று புரியாத வகையில் நித்தம் நித்தம் குழப்பம்!
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க.வின் வேட்பாளர் திருமதி.திரௌபதி முர்மு சென்னை வந்து பன்னீர் அணி, பழனிச்சாமி அணியைத் தனித்தனியே சந்தித்து ஆதரவு கோரினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலை திரௌபதி முர்மு அவர்கள் தாக்கல் செய்யும் நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வமும் அவரது மகனும் கலந்து கொண்டனர்! எடப்பாடி அணிசார்பில் தம்பிதுரை அங்கு இருந்தார்!
நீதிமன்றம், தேர்தல் கமிஷன் போன்றவற்றின்; ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தரும் அங்கீகாரத்தை விட டெல்லி பா.ஜ.க.வின் அங்கீகாரத்தையே இரு அணியினரும் எதிர்பார்த்துக் கிடந்தது தெளிவாகத் தெரிந்தது.
அந்த வேட்பு மனு தாக்கல் நிகழ்வின் போது பன்னீர்செல்வத்துக்கும் அவரது மகனுக்கும் அங்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் எடப்பாடி அணிக்கு தரப்படவில்லை என்பது கண்கூடு!
அந்த நிகழ்வு முடிந்தபின் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர், அ.தி.மு.க.வின் ஆதரவு, பா.ஜ.க. வேட்பாளர் திரௌபதி முர்முக்குத்தான் என அறிவித்து, தான்தான் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாளர் போல டெல்லியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வந்தார்!
டெல்லியிலிருந்து பன்னீர் திரும்பிவிட்டார்! டெல்லி பயணத்தைப் பொறுத்தவரை அது தனக்கு ஒரு வெற்றிப்பயணம் போல அதனை வெளிப்படுத்திக் கொண்டார் பன்னீர்! புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தலில்; பழனிச்சாமி அணியும் - பன்னீர் அணியும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது ஆதரவை பி.ஜே.பி. வேட்பாளருக்கு அளித்தனர். வாக்குப் பதிவு முடிந்தது.
வருமான வரித்துறை - அமலாக்கத் துறை, சி.பி.ஐ. போன்றவை பழனிச்சாமியின் கூடாரத்தின்மீது படையெடுக்கத் துவங்கின! பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் எல்லாம் இந்த நடவடிக்கை கண்டு தொடை நடுங்கத் தொடங்கினர்! டெல்லியின் இந்தத் திடீர் நடவடிக்கை கண்டு மிரண்டு போன பழனிச்சாமி டெல்லி நோக்கி ஓடினார்.
பதவிக்காலம் முடிந்த குடியரசுத் தலைவரின் வழியனுப்பு விழாவிலும், புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவிலும் கலந்து கொள்ளச்செல்வதாக கூறினார்! பழனிச்சாமி கோஷ்டியின் சார்பில் புதிதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதயகுமார் புள காங்கிதம் கொண்டார்!
அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, குடியரசுத் தலைவர் பிரிவு உபசார விழாவிலும், புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவிலும் அ.தி.மு.க.வின் ஒற்றை முகமாக, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகக் கலந்து கொள்ள பா.ஜ.க. அரசு எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளது.
அரசின் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி, திடீர் வருமான வரி, அமலாக்கத்துறை ரெய்டுகளால் எடப்பாடி அணியில் ஆடிப்போய்க் கிடந்த சில முன்னாள் அமைச்சர்களுக்குத் தெம்பூட்டினார்!
ஆனால், டெல்லியில் எடப்பாடி மூக்குடைபட்டுத் திரும்பியுள்ளதாக, ஊடகங்களிலும் - நாளிதழ்களிலும் வரும் செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. பொதுவாக பிரதமர் மோடி தனது விருப்புவெறுப்புகளை நேரிடையாக வெளிப்படுத்தாமல் செயல்கள் மூலம் மற்றவர்களுக்குப் புரிய வைப்பார் என்பதை பல நிகழ்வுகளில் அவர் வெளிப்படுத்தியிருப்பதை அறிய முடியும்!
பா.ஜ.க.வின் மூத்த தலைவரான அத்வானியையே அலட்சியப்படுத்தும் வகையில் பொது மேடையில் கண்டும் காணாதது போல் பிரதமர் மோடி சென்ற காட்சிகள் ஒரு நேரத்தில் 'வைரல் வீடியோக்களாக சமூக ஊடகங்களில் வெளி வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
பிரதமர் மோடியைப் பொறுத்தவரை அ.தி.மு.க. கோஷ்டிகளில் அவரது கிருபை, கடாட்சம் போன்றவை பன்னீர் அணிக்கு இருப்பது போல அவரது சமீபத்திய நடவடிக்கைகள் படம் பிடிக்கின்றன. இல்லையேல் ஆசை, ஆசையாக பிரதமிரின் அவக்கிரகத்தைப் பெற்று விடலாம் என்ற நப்பாசையுடன் டெல்லிக்கு ஓடிய பழனிசாமி அணியினருக்கு இத்தகைய முக்குடைப்புச் சம்பவங்கள் நடைபெற்றிருக்குமா?
கடந்த முறை சென்னையில் அரசுத் திட்டங்கள் திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, எடப்பாடியுடன் எப்படி நடந்து கொண்டார் என்பதை எண்ணிப் பார்த்தால் அது விளங்கும்:
சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர்மோடி தமிழக அமைச்சர் பெருமக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவரை வரவேற்கக் காத்திருந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கு சம்பிரதாய வணக்கம் தெரிவித்துவிட்டு விரைந்து சென்று அங்கு இருந்த எடப்பாடியின் கைகளைப் பிடித்துக்கொண்டு சிறி துநேரம் பேசிக் கொண்டிருந்த காட்சி நினைவிருக்கலாம். அன்று அத்தனை முக்கியத்துவம் தந்த மோடி, அவரைத் தேடி டெல்லி வரை சென்ற எடப்பாடியை ஏறெடுத்தும் பார்க்காது.
வணக்கம் தெரிவித்து கூப்பிய கரங்களோடு நின்றவரை கண்டும் காணாதது போல அவருக்கு அருகிலிருந்த அண்ணாமலையிடம் நின்று நிதானமாகப் பேசிடும் காட்சிகள் நடுகளில் வெளிவந்துள்ளன. அது ஒன்றே பிரதமர் மோடி எடப்பாடியிடம் சுமூக உறவு காட்டிட விரும்பாத நிலையை தெளிவாக காட்டியது.
பழனிச்சாமிக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பால் அவர் வேதனைப்பட்டாரோ இல்லையோ, அவரது ஆதரவாளர்கள் பலர் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக வேலுமணி, வீரமணி, விஜயபாஸ்கர், ரமணா போன்றவர்கள் நொந்து போயிருப்பார்கள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் 'ரெய்டு' கோடி, கோடியாக கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு, கிலோ கணக்கில் தங்கம் - வெள்ளி எல்லாம் பிடிபட்டு வரும் நிலையிலும், குட்கா வழக்கு மீண்டும் உயிர் பெற்று எழுத்துள்ள வேளையிலும் பழனிச்சாமி- பிரதமர் சந்திப்பின் மூலம் நிவாரணம் தேடலாம் என நினைத் திருந்தோருக்கு பேரிடியாக டெல்லி செய்திகள் வருகின்றன.
டெல்லியின் கருணா கடாட்சம் எங்குள்ளதோ அங்கே தாவ பழனிச்சாமி கோஷ்டியின் சில தலைகள் முடிவெடுக்கலாம்; இன்னும் பல தாவல் சுத்துகளை வருங்காலத்தில் காணலாம் எனத் தோன்றுகிறது.
இதை எல்லாம் பார்க்கும் போது கவிஞர் கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ்.பாடி எம்.ஜி.ஆர். வாயசைத்த “அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?” - எனும் பாடல் வரிகள் தான் நம் நினைவுக்கு வருகிறது.
- சிலந்தி