“வட இந்திய பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பாதுகாவலராக உருவெடுத்திருக்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” எனக் குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
"என் தலைவர் மு.க.ஸ்டாலின்.
நீட் (மருத்துவ கல்வியில்) அகில இந்திய தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நீண்ட சட்ட போராட்டத்தில், வெற்றி பெற்றமைக்கு நன்றி சொல்வோம்.
வட இந்திய இதர பிற்படுத்தப்பட்ட (OBC) தலைவர்கள் இவரிடம் பாடம் கற்க வேண்டும்.#Stalin4SocialJustice"
என்று ட்விட் போட்டிருப்பவர் தமிழர் அல்ல, திலிப் மண்டல் என்ற வட இந்திய பேராசிரியர். பிரபல பத்திரிகையாளரும் கூட.
முதுநிலை மருத்துவக் கல்வியில், அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இதற்காக வழக்கறிஞர் வைத்து வாதாடிய இயக்கம் தி.மு.க. இந்த தீர்ப்பை வென்றெடுத்ததற்கு தான் ட்விட்டரில் வட இந்தியர்கள் "My leader M.K.Stalin" என்ற ஹேஷ்டேக்கோடு நன்றி தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள்.
இந்தி திணிப்பை எதிர்க்கும் இயக்கம் என்ற அடிப்படையில், தி.மு.கவை விரோதமாக பார்ப்பதுதான் வடஇந்தியர்களின் வழக்கம். ஆனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காலத்தில் இது மாறி வருகிறது. அவரை தங்கள் தலைவர் என வடஇந்தியர்கள் ட்விட்டரில் கொண்டாடும் காட்சியை இப்போது நாம் காண்கிறோம்.
உயர்நீதிமன்றத்தில் 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்தபோதே, இதே போன்று My leader M.K.Stalin என்றும் My Neta M.K.Stalin என்றும் பாராட்டி, நன்றி தெரிவித்தார்கள். இப்போது இரண்டாம் முறை.
இந்த வழக்கில் வென்றெடுத்ததன் மூலம் வட இந்திய பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பாதுகாவலராக உருவெடுத்திருக்கிறார் நமது முதல்வர் தளபதி அவர்கள். வட இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் சமூகநீதிக்காக போராடும் தலைவர்கள் யாரும் இல்லை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போராடுகிறார், என்ற கருத்தை ஒட்டித்தான் வட இந்தியர்களின் ட்வீட்கள் அமைந்திருக்கின்றன.
இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அரசியல் போராட்டம் நடத்துவது மாத்திரம் தான் அரசியல் கட்சியின் வேலை என்று இருந்து விடாமல் சட்டப் போராட்டமும் நடத்தியதால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இது தான் தி.மு.க சமுதாய இயக்கம் என்பதற்கான அத்தாட்சி. இதுதான் தளபதி அவர்கள் மக்களுக்கான தலைவர் என்பதற்கான அடையாளம்.
புரட்சியாளர் அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் வந்ததே தமிழர் தந்தை பெரியார் அவர்களால் தான். சென்னை மாகாணத்தில், நீதிக் கட்சி வழங்கிய சாதி வாரி இடஒதுக்கீட்டை, இந்திய அரசு மறுத்த போது தந்தை பெரியார் போராட்டத்தில் இறங்கினார். தமிழகம் பொங்கி எழுந்தது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. சமூகநீதி காக்கப்பட்டது.
இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று இடஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தவும் தலைவர் கலைஞர் அவர்கள் தான் தேவைப்பட்டார். அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் மண்டல் கமிஷன் அறிக்கையின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டது.
இன்றைக்கு உயர் மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தின் முதல்வர் வென்று கொடுத்ததன் மூலம் இந்தியாவின் சமூகநீதிக்கு பாதுகாவலர்கள் தமிழக தலைவர்கள் தான், திராவிடத் தலைவர்கள் தான் என்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வெற்றியை பிரகடனப்படுத்தி, கொண்டாடிக் கொண்டிருக்கவில்லை முதல்வர் தளபதி அவர்கள். இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்து என்ன பணிகள் இருக்கின்றன என்று தான் பட்டியலிட்டிருக்கிறார்.
"அகில இந்திய தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒவ்வொரு மாநிலமும் 100% இடங்களை நிரப்பிக் கொள்ளும் நடைமுறை வரவேண்டும்". இந்த அகில இந்திய தொகுப்புக்கு மருத்துவ கல்லூரி இடங்களை மாநிலங்கள் ஒதுக்க வேண்டும் என்பதே உரிமை மீறலாகும். அதை எதிர்த்து குரல் கொடுத்து மாநில சுயாட்சி குரலை மீண்டும் ஓங்கி ஒலித்திருக்கிறார் நம் தளபதி அவர்கள். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து தான் குரல் எழுப்பி இருக்கிறார் தளபதி.
"பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில் உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது" என்று அடுத்து வலியுறுத்தி உள்ளார். சமூகநீதியை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மழுங்கடிக்க முயற்சிக்கும் பாரதிய ஜனதாவின் ஒன்றிய அரசை இதன் மூலம் எச்சரித்துள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநில முதல்வரும், மாநிலக் கட்சியின் தலைவரும் இந்தக் குரலை எழுப்பவில்லை. ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு அடிபணிந்து வாய் மூடி நிற்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து குரல் கொடுக்கிற தலைவராக தளபதி அவர்கள் தான் திகழ்கிறார்கள்.
வெறும் எச்சரிக்கையோடு நிற்கவில்லை. "நடக்கவுள்ள விசாரணையின்போதும், அரசியல் சாசன அமர்வின் முன் உள்ள மூல வழக்கிலும் 10% இடஒதுக்கீடு சட்டவிரோதமானது என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து தி.மு.கழகம் அநீதியை முறியடிக்கும்",என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் தளபதி. தி.மு.கவும் தானும் சமூகநீதிக்கான போரை தொடர்ந்து முன்னெடுப்போம் என்பதை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். இது தமிழர்களுக்கான சமூகநீதி போர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான, பட்டியலினத்தவருக்கான சமூகநீதிப் போர்.
பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு என்பது பிற்படுத்தட்டோருக்கு மாத்திரம் எதிரானது அல்ல, இது பட்டியலினத்தவருக்கும் எதிரானதுதான். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவரை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் 10% EWS இடஒதுக்கீட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறுக்குவழியில் நுழைகிறார்கள், இடத்தைத் தட்டிப் பறிக்கிறார்கள்.
இது மாத்திரமல்ல, நீட் தேர்வில் மெல்ல, மெல்ல இடஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம் நிறைவேறும்போது, பட்டியலினத்தவருக்கு பேரிழப்பு ஏற்படும். அதனால் இப்போதிருந்தே 10% EWS ஒதுக்கீட்டையும், நீட் தேர்வையும் எதிர்த்தால் தான், சமூகநீதியை காக்க முடியும். அதைத்தான், தமிழக முதல்வர் சரியாக முன்னெடுக்கிறார்கள்.
எனவே இந்திய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டிற்கான ஆபத்தை உணர்ந்து பாடுபடுகின்ற ஒரே தலைவராக கழகத் தலைவர் தளபதி மாத்திரமே திகழ்கிறார். இந்தப் போரில், அவர் தலைமையில் சமூகநீதியில் ஆர்வமும், அக்கறையும் கொண்ட இந்தியர்கள் திரள வேண்டும்.
இந்திய சமூகநீதியின் பாதுகாவலர் தளபதி!
இவ்வாறு தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.