“நீட் தேர்வு விவகாரத்தில் இந்தி பேசாத அனைத்து மாநில மக்களையும் தளபதி மு.க.ஸ்டாலின் வழிநடத்துகிறார்” மேற்கு வங்க மக்களுக்கான அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் கார்கா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்கு ஒன்றிய மோடி அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அந்தவகையில், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி எதிர்ப்பை மிகக் கடுமையாகப் பதிவு செய்தது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆதாரப்பூர்வமாக தெரியவந்ததையடுத்து, நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல், தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு காண, தமிழக எம்.பி.,க்கள் தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச முயற்சித்தனர்.
ஆனால் அதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி அளிக்காததால், தமிழக எம்.பிக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவும், நீட் விலக்கு விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கவும், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை, தமிழக அரசு நாளை சென்னையில் கூட்டியுள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று, 110 விதியின் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “நீட் தேர்வு மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கிறது. இதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருவதை கண்டும் காணாமல் இருந்து விட முடியாது.
இதை சரி செய்து, மாநில உரிமைகளையும், நம் மாணவர்களுடைய நலனையும், மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கத்தோடு,செப்டம்பர் 19ஆம் தேதி ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமுன்வடிவு இன்னமும், கவர்னரால் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படாமல் இருக்கிறது.
கடந்த டிசம்பர் 28ம் தேதி தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், தமிழக எம்.பி.,க்கள், ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனு, மேல் நடவடிக்கைக்காக, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் வலியுறுத்த, அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும், ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டனர். அவர் மறுத்து வருகிறார். இது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது. அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய மனு, அவரது அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
நாமும், நம் மாநிலமும் இன்று அடைந்துள்ள வளர்ச்சியை, போராட்டங்களின் வழியாகத்தான் பெற்றுள்ளோம். எனவே, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்தின் அடுத்தகட்டப் போராட்டம் எனக் கருதி, முன்னெடுத்து செல்வோம்.
இந்தச் சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, நாம் ஒருமித்த நிலைபாட்டை எட்ட, சட்டசபை கட்சிகளின் கூட்டத்தை, நாளை கூட்ட முடிவு செய்திருக்கிறோம். அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்.” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்க மக்களின் தேசிய அமைப்பான பங்ளா பொக்கோவின் பொதுச்செயலாளர் டாக்டர் கார்கா சாட்டர்ஜி, “நீட் தேர்வு விவகாரத்தில் இந்தி பேசாத அனைத்து மாநில மக்களையும் தளபதி மு.க.ஸ்டாலின் வழிநடத்துகிறார். இந்தி பேசாத அனைத்து மாநிலங்களும் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்!” எனத் தெரிவித்துள்ளர்.
இதற்கு முன்னதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நீட் எதிர்ப்புக் குரல் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடுமையாக எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.