இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் குத்தகை உள்ளவர்கள் வாடகையை வரைமுறைப்படுத்தும் வகையில் வாடகை நிர்ணய குழுவை அமைக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளதாகவும், விரைவில் அந்த குழு அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணையவழியில் வாடகை செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வாடகைதாரர்கள் சிலர் வாடகையை அமைச்சர் வசம் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் வாடகை, குத்தகையை செலுத்த 1-5 தேதிகள் ஆக இருந்தது, தற்பொழுது 1-10ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், தற்பொழுது இணைய வழியில் செலுத்தும் வசதி அறிமுகப்பட்டுத்தப்படுள்ளது என்றும் கூறினார்.
மேலும் இதன் மூலம் அமைச்சர், அதிகாரிகள் என அனைவரும் அறிந்துக்கொள்ள முடியும் என்றும், இணையத்தில் செலுத்த இயலாதவர்கள் நேரிடையாக கோவில்களிலும் செலுத்தினால் அதுவும் பதிவேற்றம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வாடகை செலுத்தி வருகிறார்கள். சிலர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். சிலர் வழக்கம்போல் செலுத்துகிறார்கள் என்று கூறிய அமைச்சர், இதனை வரைமுறைப்படுத்தும் வகையில், நியாயமான வாடகை நிர்ணய குழுவை அமைக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார்.
விரைவில் இந்த குழு அமைக்கப்படும் என்றும், 3 லட்சம் ஏக்கர் சொத்துக்கு வாடகை வந்து கொண்டிருக்கிறது, பல ஆயிரம் ஏக்கர் சொத்துக்கள் வாடகை விட முடியாமல் இருக்கிறது. அவை இப்போது கண்டறியப்பட்டு வருகிறது. அதேபோல் சுமார் 5 ஆயிரம் இடங்கள் ரேவர் கருவி மூலம் அளக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
கோவிலை திறக்க 10 நாட்கள் அவகாசம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர், பாஜக போன்று ஒரு 100 பாஜக வந்தாலும் அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது என்றும், மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். எனவே போராட்டம் நடத்துபவர்கள் மத்திய அரசிடம் இருந்து, திருவிழாக்களுக்கு அனுமதி, போராட்டம் நடத்த அனுமதி என கடிதம் வாங்கி கொடுத்தால் அதனை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், குயின்ஸ் லேண்ட் விவகாரத்தில், நிச்சயம் இந்து அறநிலையத்துறை சட்ட போராட்டம் நடத்தி நிலத்தை மீட்கும் என்று ஏற்கனவே கூறி இருந்தது என்றும், அரசு நடத்திய சட்டபோராட்டதிற்கு வழிவகை செய்யும் வகையில் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. எனவே நீதிபதி வழிகாட்டுதல் படி, அவர்கள் வழங்கிய கால அவகாசத்திற்குள் குயின்ஸ் லேண்ட் நிலத்தை மீட்கப்படும் என்றும், அவர்கள் மேல்முறையீடு சென்றாலும், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை அரசு எடுக்கும் என்றார்.