சென்னை ஏழுகிணறு பகுதியில் வள்ளலார் வசித்த இல்லத்தில் இங்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, இன்று ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளின் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மனித கடவுளாக பார்க்கப்படும் வள்ளலாரின் 199வது பிறந்தநாள் வரும் 5ஆம் தேதி வரவுள்ள நிலையில் முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி, இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வந்து இந்த வீட்டை பார்வையிட்டுள்ளோம். இந்த வீட்டை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு தேவையான உதவிகளையும், அரசு சார்பில் செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளோம். இந்த இல்லத்தின் நிர்வாகி ஶ்ரீபதி, வழிபாட்டையும் தினமும் அன்னதானத்தையும் நடத்தி வருகிறார். வள்ளலார் புகழ் மங்காத வகையில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் அவர்கள் உறுதி பூண்டுள்ளார். எனவே அவரது வழியில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.
வடலூரில் 72 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் அறிக்கையிலேயே முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கான ஆய்வினை வடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடனும் இணைந்து நடத்தியுள்ளோம். அதற்கான வரைபடத்தை உருவாக்க ஏற்பாடு செய்துள்ளோம். அதை விரைவில் செயல்படுத்த உள்ளோம்.
கோவில்களில் ஏற்கனவே காணிக்கையாக வந்த நகைகளில் பயன்பாட்டில் உள்ளவற்றை குண்டுமணி அளவு கூட உருக்க போவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் காணிக்கையாக வந்துள்ள நகைகளை ஆய்வு செய்து, கோவிலின் வரவு பதிவேட்டில் பதிவு செய்து, அவற்றில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நகைகளை மட்டுமே கண்டறிந்து அவற்றை ஒன்றிய அரசுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள உருக்காலையில் கொடுத்து உருக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம். அப்படி கிடைக்கும் தங்கக் கட்டிகளை வங்கியின் வைப்பு நிதியில் வைத்து, அதில் கிடைக்கும் வருவாயினை கோவில் திருப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த உள்ளோம்.
இதற்காக சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று மண்டலங்களை பிரித்துள்ளோம். அங்கு பணிகளை கண்காணிக்க நீதிபதி மாலா, நீதிபதி ராஜு, நீதிபதி ரவிசந்திரப்பாபு ஆகியோரை நியமித்துள்ளோம். அவர்கள் பயன்பாட்டிற்கு உதவாத நகைகள் என்று எப்படி கருதுகிறீர்கள் என்று கேட்டார்கள். அவர்களை திருவேற்காடு கோவிலுக்கு அழைத்துச் சென்று நகைகளை தரம் பிரிக்கும் பணியினை விவரித்தோம். அதைக் கேட்டு இதுவொரு அற்புதமான திட்டம் என்றும் இதை கொண்டு வந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திட்டத்தின் சூத்திரதாரி முதலமைச்சர் தான். தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி வெளிப்படைத் தன்மையோடு நடைபெறும். இது புதிய நடைமுறை அல்ல. ஏற்கனவே நடைமுறையில் இருந்தது தான். கடந்த 10 ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. எனவே அதை மீண்டும் மேற்கொள்ள உள்ளோம். திருப்பதி கோவிலில் கூட இதுபோன்ற நடைமுறை தான் உள்ளது. தமிழ்நாட்டிலேயே திருச்சி சமயபுரம் கோவிலில் இந்த திட்டம் நடைமுறையில்தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஒன்றிய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் அறங்காவலராக உள்ள சோமநாதர் கோவில் நகைகள் கூட இதே நடைமுறையில் தான் பயன்படுத்தப்படுகிறது.
எனவே நகைகளை உருக்கும் பணியில் எந்தவித முறைகேடும் நடக்காது என உறுதி அளிக்கிறோம். நகைகளை உருக்கும் திட்டத்திற்கு பாஜக கண்மூடிதனமாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. பயன்படாமல் வைத்திருப்பதால் யாருக்கு என்ன லாபம், அவர்கள் ஏதேனும் திட்டம் வைத்திருந்தால் சொல்லட்டும். மதம், இனம் குறித்து பேசி அரசியல் செய்யக்கூடாது என்று முதலமைச்சர் கூறியுள்ளார். எனவே அப்படி என்றைக்கும் செய்யமாட்டோம்.
வழிபாட்டுத்தலங்ளில் எப்போது தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேள்விக்கு, "கொரானா தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்த பின்னரே, அனைத்து கோவில்களும் திறக்கப்படும். இருந்தாலும் அனைத்து கோவில்களும் அந்தந்த நாளுக்கான பூசைகள் நடத்தப்பட்டே வருகின்றன" என்றார்.