தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவிய நாள் தொட்டு இதுகாறும் ஆளும் அ.தி.மு.க அரசு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரையும், உறுப்பினர்களிடமும் கலந்தாலோசித்து எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமலேயே இருந்தது.
விளைவு, மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4.22 லட்சத்தை தாண்டியதே ஆகும். இருப்பினும், பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது, கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது தொடங்கி தற்போது இ பாஸ் முறையை ரத்து செய்வது வரை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன் விளைவாக எடப்பாடி அரசு தற்போது இ பாஸ் நடைமுறையை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஒவ்வொரு அறிவிப்பும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிக்கைகள், கண்டனங்கள், எதிர்ப்புகளை தொடர்ந்தே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதலமைச்சராக தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்பதையே சுட்டிக்காட்டுகிறது என தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இ பாஸ் முறை ரத்து உள்பட தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய விஷயங்களை அச்சு பிசகாமல் அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி. 10ம் வகுப்பு, கல்லூரி தேர்வுகள் ரத்து என அனைத்திலும் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் சொல்கிறார், ஈபிஎஸ் செய்கிறார்” உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.