கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக நாடு முழுவதும் இ பாஸ் என்ற நடைமுறையை மத்திய மாநில அரசுகள் கடைபிடித்து வந்தன. இதன் மூலம் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் உரிய ஆவணங்களை சமர்பித்து அரசிடம் அனுமதி பெற்ற பின்னரே செல்லும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மத்திய அரசு இந்த இ பாஸ் நடைமுறையை ஏற்கெனவே நீக்கியிருந்தாலும் மாநிலங்களில் தொடர்ச்சியாக நடைமுறையிலேயே இருந்து வந்தன. தமிழகத்தில் மாவட்டங்களிடையே பயணிக்க இ-பாஸ் நடைமுறை உள்ளது.
பல்வேறு முறைகேடுகள் நடைபெறும் இ-பாஸ் நடைமுறையை நீக்கவேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு இ-பாஸ் நடைமுறையை நீக்க மறுத்து வந்தது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்றால் எதற்காக அந்த நடைமுறை இருக்கவேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன.
இடைத்தரகர்கள் மூலம் அவசர பணிகளுக்காக செல்வோரிடம் அதிகளவில் பணம் வசூலிக்கப்பட்டு வருவதால் முற்றிலும் இந்த இ பாஸ் நடைமுறையை நீக்காமல் எடப்பாடியின் அதிமுக அரசு இழுத்தடித்து வருகிறது எனவும் காட்டமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், நாளையுடன் (ஆக.,31) தமிழகத்தில் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் செப்டம்பர் 30ம் தேதி வரையில் ஊரடங்கை நீட்டித்து பல்வேறு தளர்வுகள் மற்றும் நிபந்தனைகளையும் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக “தமிழ்நாடு முழுவதும் இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. எனினும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் தமிழகத்தில் வருவதற்கு இ பாஸ் நடைமுறை தொடரும்.
ஆதார, பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இ பாஸ் விண்ணப்பத்தை அனைவருக்கும் தானியங்கி முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ பாஸ் வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கும் அழுத்தங்களுக்கும் அடிப்பணிந்து எடப்பாடியின் அதிமுக அரசு இ பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது.