மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லாமல் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அமித்ஷாவே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
குர்கானில் உள்ள மேடாந்தா என்ற தனியார் மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருவனந்தபுர தொகுதியின் காங்கிரஸ் எம்.பி சசிதரூர், அமித்ஷா ஏன் சிகிச்சை எடுக்க தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், “ஏன் நம்முடைய உள்துறை அமைச்சர் உடல் நிலை சரியில்லாத போது எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லாமல் அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார் என வியக்கிறேன். பொது மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும் என்றால் பொது நிறுவனங்களுக்கு அதிகாரம் வாய்ந்தவர்களின் ஆதரவு வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் கர்நாடகா மற்றும் மத்திய பிரேதச பாஜக முதலமைச்சர்கள் பிஎஸ் எடியூரப்பா மற்றும் சிவராஜ் சிங் சவுஹான் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.