அரசியல்

வேலுமணி என்ற தனி நபருக்காக நடக்கும் அரசுப் பணிகள் சாமானிய மக்களுக்காக நடக்காதது ஏன்? -  திமுக MLA விளாசல்

கோவை மாநகராட்சியில் உள்ள மற்ற 87 மயானங்களையும், இதுபோல சீரமைக்க ஏன் இதுவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். 

வேலுமணி என்ற தனி நபருக்காக நடக்கும் அரசுப் பணிகள் சாமானிய மக்களுக்காக நடக்காதது ஏன்? -  திமுக MLA விளாசல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2015-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அனைத்து அரசு இயந்திரங்களையும் பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, மக்களின் வரிப்பணம் பல கோடிகளை வாரி இறைத்து செலவிட்டு, பாலக்காடு சாலை, சுகுணாபுரம் அருகில், மயானம் அமைக்க நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் எதற்காக? எனக் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார் கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.

அதில், “பாலக்காடு நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதாக உத்தேசம் இருப்பதால் மேற்கண்ட மயானப் பகுதி பாதிக்கும் சூழ்நிலை உள்ளது என்றும், இதனால், அந்த இடத்தில் பொது மயானம் அமைப்பதற்காக வனத்துறைக்கு சொந்தமான, மதுக்கரை கிராமம் – க.ச.எண்கள் 1044 /6, 1143/1, 1143/2B, 1145 மற்றும் 1146-ல் அமையும் 9 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் வாங்கி, அதற்கு ஈடாக வனத்துறையின் விதிகளின் படி , இரு மடங்கு நிலமான 18 ஏக்கர் நிலம் மேட்டுப்பாளையம் தாலுகா, தோலம்பாளையம் கிராமத்தில் வனத்துறைக்கு ஒதுக்கியும், மேற்காணும் உத்தேச மயான அபிவிருத்திக்கு மதிப்பீடாக ரூ.340 இலட்சங்கள் ஒதுக்கியும் அனுமதிக்கலாம்” என்று கோவை மாநகராட்சி மன்ற ஆவணம் ந.க.எண் 11324 / 2015 / எம்.எச் .5 தேதி 25.11.2015-ன்படி கூறப்பட்டுள்ளது. இது கோவை மாநகராட்சி மன்றத் தீர்மானம் எண் 265, நாள் 22.12.2015-ன்படி, அன்றைய மேயர் ப.ராஜ்குமார் அவர்களால் பின்னேற்பு வழங்கப்பட்டது.

இதன்பிறகு கோவை மாநகராட்சி ஆணையாளரிடமிருந்து, ந.க.எண் 11324 / 2015 / எம்.எச் .5 என்ற கடிதத்தின் அடிப்படையில் 23.11.15, 25.11.15, 08.08.16, 27.08.16, 01.09.16, 17.09.16, 01.11.16, 01.12.16 ஆகிய தேதிகளில் தமிழக வனத்துறைக்கும், மேலும், தமிழக வனத்துறையிடமிருந்து TS3 / 25391 /2016 என்ற கடிதத்தின் அடிப்படையில் 18.08.16, 02.09.16, 30.09.16, 11.11.16, 20.12.16, 14.02.17, 06.03.17, 22.05.17, 23.11.17, 12.03.18 ஆகிய தேதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளருக்கும், மயானம் அமைக்க அனுமதி பெறுவது சம்பந்தமாக பல முறை தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்த மயானம் அமைப்பதற்கு, ஆன்லைன் விண்ணப்பம் எண் FP / TN /Others / 20886 / 2016 Dated 08.08.2016 மற்றும் கடிதம் எண் 9444 / FR 10 / 2017 – 2 Dated 14.07.2017-ன்படியும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்தது.

வேலுமணி என்ற தனி நபருக்காக நடக்கும் அரசுப் பணிகள் சாமானிய மக்களுக்காக நடக்காதது ஏன்? -  திமுக MLA விளாசல்

ஆனால், கடந்த 24.11.2017 அன்று , தமிழக வனத்துறை சார்பில் அனுப்பப்பட்ட “ந.க.எண் . வ 1 / 7467 / 2017 / நாள் : 24.11.2017” கடிதத்தின்படி “மேற்கண்ட தோலம்பாளையம், புல எண் 958-ல் உள்ள நிலம் ஏற்கெனவே தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 16-ன் கீழ் ஒதுக்கு வனங்களாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இந்த நிலத்தை மாற்று நிலமாக வழங்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு கடந்த 2015 ம் ஆண்டிலிருந்து 2017 ம் ஆண்டு வரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்ற ஒரு தனி நபருக்காக, அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி நடைபெற்ற மேற்கண்ட கடிதப் போக்குவரத்துகள், ஆய்வுப்பணிகள் அனைத்தும் “விழலுக்கு இறைத்த நீரைப் போல” ஆகியது

அதனால், இரண்டாம் கட்டமாக , மேற்கண்ட மயானத்திற்கு அனுமதி பெரும் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டு , கோவை மாநகராட்சி மன்றத் தீர்மானம் எண் 137, நாள் 07.05.2018-ன்படி, தோலம்பாளையம் நிலத்திற்கு பதிலாக, பேரூர் தாலுகா, தென்கரை கிராமம் பகுதியில் 18 ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு ஒதுக்க, அன்றைய மாநகராட்சி ஆணையர் / தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் அவர்கள் அனுமதி அளித்திருந்தார்

பின்னர் , மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பிய கடிதம் எண் . F.No. 4- TNB014 / 2017 – CHN/ 1962 Dated 14.12.2018-ல் “நிலப் பரிமாற்றத்திற்கு, இரண்டாம் கட்ட அனுமதி அளிப்பதற்கு முன், இந்த நிலத்தை தமிழக வனத்துறைக்கு மாற்றித் தரவேண்டும் எனவும், மேற்கண்ட தென்கரை கிராமம், SF NO 499 / 3-ல் ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தில் ஆயிரம் மரங்களை நட வேண்டும்” என்பன உள்ளிட்ட 18 நிபந்தனைகளுடன் முதல் கட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக “பொது மயானம் அமைக்க இரண்டாம் கட்ட இறுதி அனுமதி பெறுவதற்கு 79,23,277 ரூபாய் இழப்பீடாகத் தர வேண்டும்” என தமிழக வனத்துறை , கடிதம் எண் 10872 / 2015 D1 Dated 26.12.2018-ல், கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் எழுதியிருந்தது. மேற்கண்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுப்பிய 18 நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டு, இழப்பீட்டு தொகையும் வழங்கினால்தான் இரண்டாம் கட்ட அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

வேலுமணி என்ற தனி நபருக்காக நடக்கும் அரசுப் பணிகள் சாமானிய மக்களுக்காக நடக்காதது ஏன்? -  திமுக MLA விளாசல்

ஆனால், மேற்கண்ட இழப்பீட்டுத் தொகை 79,23,277 ரூபாய் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலத்தை தமிழக வனத்துறைக்கு மாற்றித் தரவேண்டும் எனவும், மேற்கண்ட தென்கரை கிராமம், SF NO 499 / 3-ல் ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தில் ஆயிரம் மரங்களை நட வேண்டும் என்பது உள்ளிட்ட 18 நிபந்தைனைகளும் அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இரண்டாம்கட்ட அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து அரசு நிர்வாகம் தரப்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இதனால் விதிமுறைகளுக்கு மாறாக , மேற்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்றாமல் இரண்டாம் கட்ட அனுமதி பெறாமலேயே, அவசர அவசரமாக , மேற்கண்ட மயான கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டு, முடிவடைந்து விட்டதோ ? என்று கருத வேண்டியுள்ளது.

மேலும் , மஞ்சிப்பாலம் ஓடைப் புறம்போக்கில்தான் இந்த நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடம் அமைந்துள்ள மயான நுழைவாயிலில், மேற்குப்புறத்தில் உள்ள கிழ மேல் மதில் சுவர்கள் நேராக கொண்டு சென்றால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தந்தை நினைவிடம் இடிக்கப்பட்டுவிடும் என்பதால் , கிழ மேல் மதில் சுவர்கள் வளைத்து கட்டப்பட்டுள்ளது

இவ்வாறு , விதிமுறைகளுக்கு மாறாக , அதிகார துஷ்பிரயோகம் செய்து , பாலக்காடு சாலையில் உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தந்தை நினைவிடம் அமைந்துள்ள மயானம் சுற்றுச் சுவர் கட்டி புதுப்பிக்கப்பட்டது. இந்த மயானத்திற்கு அருகிலேயே, சுகுணாபுரம் பகுதியில், இந்துக்கள் மயானத்திலும், அதற்கு எதிரே இருக்கும் கிறிஸ்துவர்களின் மயானத்திலும், கணிசமான அளவில் காலி இடங்கள் இருக்கின்றன.

ஆனால், சுகுணாபுரம் பகுதியில் போதுமான மயானங்கள் இருந்தும் , தன்னுடைய தந்தை நினைவிடத்தைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் “மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

வேலுமணி என்ற தனி நபருக்காக நடக்கும் அரசுப் பணிகள் சாமானிய மக்களுக்காக நடக்காதது ஏன்? -  திமுக MLA விளாசல்

அப்படியென்றால், கோவை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மயானங்களை சீரமைக்க அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் கோரிக்கைகள் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்? இந்த மயானத்தின் பணிகளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முன்னுரிமை அமைச்சர் எஸ்.பி . வேலுமணியால் வழங்கப்பட்டது?

“குனியமுத்தூர் காவல் சோதனைச் சாவடியைத் தாண்டி உள்ள பாலத்துடன் கோவை மாநகராட்சி எல்லை முடிந்துவிடுகிறது. பாலக்காட்டிலிருந்து கோவை வரும்போது இந்த மயானத்தைத் தாண்டிய பிறகுதான், ‘கோவை மாநகராட்சி உங்களை வரவேற்கிறது’ என்ற வரவேற்புப் பலகையும் இருக்கிறது. கோவை மாநகராட்சி எல்லைக்குள் இல்லாத ஒரு பகுதிக்கு கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுப்பது ஏன்?

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு வரை அரசு இயந்திரத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் வீணடித்து நடைபெற்ற மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் எதற்காக?

அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தந்தை நினைவிடத்தைக் காப்பாற்றும் ஒற்றை சுயநலம்தான் காரணமா?

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் 23, மேற்கு மண்டலத்தில் 23, வடக்கு மண்டலத்தில் 18, தெற்கு மண்டலத்தில் 15, மத்திய மண்டலத்தில் 8 என்று மொத்தம் 87 மயானங்கள் உள்ளது. இந்த மயானங்கள் பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இன்றி கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் மண்டி, பாதைகள் அனைத்தும் கரடு, முரடாக காடு போல காட்சியளிக்கிறது.

இந்த மயானங்களில் முறையான பராமரிப்பு, போதிய பணியாளர்கள், மேற்கூரை, மயான மேடை, தண்ணீர் வசதி, மின் விளக்கு, கழிப்பிடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, கடந்த 11.01.19, 21.01.19, 04.02.19, 13.08.19, 22.10.19, 13.01.2020 ஆகிய தேதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து நான் கடிதம் அளித்தும், இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேற்படி மயானத்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டிய அக்கறையில், ஒரே ஒரு சதவிகிதம் கோவை மாநகராட்சியில் உள்ள மற்ற மயானங்களில் காட்டியிருந்தால், கோவை மாநகராட்சியில் உள்ள 87 மயானங்களும் சீரமைக்கப் பட்டிருக்கும். ஆனால், தனது தந்தையின் நினைவிடத்தைக் காப்பற்றுவதற்காக மட்டும், அவரது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அனைத்து அரசு இயந்திரங்களையும் பயன்படுத்தி, மக்களின் வரிப்பணம் பல கோடிகளை வாரி இறைத்து செலவிடும்போது, கோவை மாநகராட்சியில் உள்ள மற்ற மயானங்களையும் இதுபோல விரைந்து சீரமைக்கலாமே?

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்ற ஒரு தனி நபருக்காக நடக்கும் அரசுப் பணிகள் சாதாரண - சாமானிய மக்களுக்கு என்றால் நடக்காதது ஏன்?

மேலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தந்தை நினைவிடத்தை காப்பாற்றுவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு இரவு பகலாக பணியாற்றும் அரசு அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் அதே வேகத்தில் மக்களுக்காக பணியாற்ற தயங்குவது ஏன்?

அரசு நிர்வாகத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒவ்வொருவரும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தந்தை நினைவிடப் பணிகளை முன்னுதாரணமாக கொண்டு, தனது சுயநலக் காரணங்களுக்காக , இவ்வாறு அரசு இயந்திரங்களை முறைகேடாக பயன்படுத்தினால் மக்களின் கதி என்ன?

ஆகவே, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய சுயநலத்திற்காக அரசு இயந்திரத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் வீணடிப்பதை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். இப்படி முடங்கிப் போயுள்ள அரசு நிர்வாகத்திற்கும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கும், அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக முறைகேடுகளுக்கும் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories