அரசியல்

“தோல்வி பயத்தால்தான் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க நினைக்கிறது அ.தி.மு.க”- கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

தோல்வி பயத்தால்தான் அ.தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைத்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

“தோல்வி பயத்தால்தான் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க நினைக்கிறது அ.தி.மு.க”- கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''நாடாளுமன்றத்தில் வருகின்ற திங்கட்கிழமை தேசிய குடியுரிமை சட்ட மசோதா கொண்டு வரப்படவுள்ளது. இதில் முஸ்லிம் மதத்தினரை தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்க உள்ளனர். இது மதப் பிளவுகளை உண்டாக்கும்.

ஏற்கனவே இந்தியாவில் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் உள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க எந்த மசோதாவும் இதுவரை கொண்டு வரப்படவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தமிழகம் அலங்கோலமான நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக தேர்தலை நடத்தவேண்டும். தமிழ்நாட்டில் தேர்தல் என்பது தொடர்கதை போல் நடைபெறுவதால் பணவிரயம் ஏற்படும்.

தோல்வி பயத்தால் அ.தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து தள்ளி வைக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி போல உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி ஏற்பட்டால் அது வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காகத்தான் உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க தள்ளி வைக்க நினைக்கிறது.

“தோல்வி பயத்தால்தான் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க நினைக்கிறது அ.தி.மு.க”- கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

தெலங்கானா பாலியல் வல்லுறவு வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு அதிகபட்சமான தண்டனை வழங்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், போலிஸாரே தண்டனை என்ற பெயரில் கொன்றிருப்பது சரியல்ல.

அரசியல் பின்புலம் இல்லாதவர்களுக்கு ஒரு தண்டனையும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் வழக்கிலிருந்து ஜாமினில் வெளியே வந்து வழக்குகளை பல ஆண்டுகள் நடத்தும் நிலையும் இருக்கிறது.

இதுபோல தவறு செய்பவர்கள் அனைவரையும் என்கவுன்டர் செய்துவிட முடியுமா? என்கவுன்டர் ஒரு நேர்மையான முறையில்லை. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை குறைந்து வருவதால் தான் இதுபோன்ற போலிஸாரின் நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் தற்கொலை நடந்து வருகிறது. இதில் குற்றவாளிகளை உரிய முறையில் தண்டிக்காமல் அவர்களுக்கு காவல்துறை துணைபோகிறது'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories