சென்னை கொளத்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு மறைந்த அனிதாவின் நினைவாக Anitha Achiever அகாடமி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அனிதா அகாடமியில் பயிற்சி பெற்ற 128 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், படிப்பு முடித்த 56 மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு சான்றிதழ்களையும், தற்போது அகாடமியில் பயிற்சி பெறவிருக்கும் 50 மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களையும், பேனாவையும் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தி.மு.க உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக அ.தி.மு.க அமைச்சர்கள் தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது தி.மு.க.வின் எண்ணம் இல்லை, முறையாக நடத்த வேண்டும் என்று தான் கேட்கிறோம்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், உள்ளாட்சி பிரதிநிதிகளை எப்படி தேர்தெடுக்கப்போகிறார்கள் என்று தான் கேட்கிறோம். தோல்வி பயத்தில் அ.தி.மு.க அரசு தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறது. எந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் சந்திக்க தி.மு.க தயாராக உள்ளது'' எனத் தெரிவித்தார்.