பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் நடைபெற்ற "ஹவ்டி மோடி" நிகழ்ச்சியில் மோடி கலந்து சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட அமெரிக்காவை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய அமெரிக்க நாடாளுமன்ற பெரும்பான்மை குழு தலைவர் ஸ்டேனி ஹோயர், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா புதிய உயரத்தை அடைந்து வருகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவை வளர்த்து கொள்வதுதான் இந்தியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் ஒரே நோக்கம்.
காந்தி கற்றுக் கொடுத்தபடி ,நேரு கனவு கண்ட, பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைகளையும் பாதுகாக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவைப் போலவே அமெரிக்காவும் எதிர்கால சந்ததிக்காக தனது பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பெருமை கொள்கிறது'' எனத் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவை பா.ஜ.க-வினர் தொடர்ந்து தாக்கிப் பேசிவந்தனர். ஹூஸ்டனில் பிரதமர் மோடியின் நிகழ்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் உருவாவதற்கு ஜவஹர்லால் நேரு தான் காரணமென பா.ஜ.க தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மோடி முன்னிலையில் அமெரிக்க தலைவர் ஒருவர் நேருவை புகழ்ந்தது பா.ஜ.க.வினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், ஸ்டேனி ஹோயரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். நேரு குறித்து ஹோயர் பேசும் போது பிரதமர் மோடி கொடுத்த ரியாக்சன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.